Published : 12 Feb 2022 12:54 PM
Last Updated : 12 Feb 2022 12:54 PM

தமிழக அரசு மருத்துவர்களுக்கு உயர்சிறப்பு படிப்புகளில் 50% ஒதுக்கப்படுவதை உறுதி செய்க: அன்புமணி

சென்னை: ’மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம், உயர் நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்குவதற்கான 50% இடங்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி, அவற்றுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகமே நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்களில் 50% இடங்கள் தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அனைத்து இடங்களையும் தாங்களே நிரப்பப்போவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பும், உரிமைப் பறிப்பும் ஆகும்.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 20 வகையான உயர்சிறப்புப் படிப்புகளில் 369 இடங்கள் உள்ளன. 2017-ம் ஆண்டு வரை இந்த இடங்களை தமிழக அரசுதான் நிரப்பி வந்தது. ஆனால், 2017-ம் ஆண்டு முதல் இந்த இடங்கள் அனைத்தையும் மத்திய அரசே எடுத்துக் கொண்டு நிரப்பி வருகிறது. அந்த இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டையும் மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. அதனால், உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் பெரும்பான்மையான இடங்களை பிற மாநில மருத்துவர்கள் கைப்பற்றிக் கொள்கின்றனர்; தமிழக மருத்துவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் எதிர்காலத்தில் உயர்சிறப்பு மருத்துவ வல்லுனர்கள் போதிய அளவில் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர்சிறப்பு மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை தமிழக அரசே நடத்த அனுமதிக்க வேண்டும்; அதில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இத்தகைய சூழலில் மருத்துவர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஜனவரி 12-ஆம் தேதி அளித்தத் தீர்ப்பில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என ஆணையிட்டது.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்போவதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இது தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இதை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தில் 2010-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, நாடு முழுவதும் உள்ள உயர்சிறப்பு மருத்துவக் கல்வி இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம் தான் நடத்துகிறது. வரும் ஆண்டுகான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிடும் போது, அன்றைய நாளில் நடைமுறையில் உள்ள நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, அதை செயல்படுத்த வேண்டும். அதை மத்திய அரசு மதிக்காதது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த மேல்முறையீடு இன்னும் விசாரணைக்கு ஏற்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு உயர்சிறப்பு மருத்துவக் கல்வி இடங்களில் 50% இட ஒதுக்கீடு வழங்குவதை உச்சநீதிமன்றமும் எதிர்க்கவில்லை. 2017-ஆம் ஆண்டில் மருத்துவ மேற்படிப்பு, உயர்சிறப்பு மருத்துவப், படிப்பு ஆகியவற்றில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசு மருத்துவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு சட்ட அதிகாரம் உண்டு என்று தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இப்போது மீண்டும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், உயர்சிறப்பு படிப்புகளிலும் தனி இட ஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் முட்டுக்கட்டை போடுவது நியாயமும் அல்ல; சமூக நீதியும் அல்ல.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள இடங்களுக்கு மத்திய அரசே கலந்தாய்வு நடத்துவதால், 85% இடங்கள் பிற மாநில மருத்துவர்களுக்கே கிடைக்கின்றன. இதே நிலை இன்னும் ஐந்தாண்டுகளுக்கு தொடர்ந்தால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதய நோய், குழந்தைகளுக்கான இதய நோய், நரம்பியல் நோய், சிறுநீரகவியல், குழந்தைகள் நலம், உள்ளிட்ட துறைகளில் மருத்துவ வல்லுனர்களே இல்லாத நிலை உருவாகி விடும். சமூகநீதிக்கு எதிரான இந்த நிலை ஏற்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது.

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர்சிறப்பு படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தமிழக அரசின் உரிமை. அதை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அங்கீகரித்திருக்கின்றன. அதற்குப் பிறகும் அந்த உரிமையை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம் பறித்துக் கொள்வதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. உடனடியாக தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, தமிழக அரசு மருத்துவர்களுக்கு உயர்சிறப்பு படிப்புகளில் 50% இடங்கள் ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகமும் உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்குவதற்கான 50% இடங்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி, அவற்றுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகமே நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x