

சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு சிறந்த சேவைக்காக சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில், பயணிகளின் பயண அனுபவத்தை விமான நிலைய அதிகாரிகள் அறிந்து வருகின்றனர். கரோனா தொற்று காலகட்டத்திலும், பயணிகளுக்கு சிறந்த சேவைகளை விமான நிலையம் வழங்கியது. இதனைக் கவுரவிக்கும் விதமாக, சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில், ‘தி வாய்ஸ் ஆஃப் தி கஸ்டமர்’ எனும் அங்கீகாரத்தை சென்னை விமான நிலையத்துக்கு வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை விமான நிலைய இயக்குநர் சரத்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்த அங்கீகாரம் சென்னைவிமான நிலையத்தில், பயணிகள் நலனில் அளித்துவரும் முன்னுரிமைக்கு கிடைத்த சான்றாகக் கருதப்படுவதுடன், தொடர்ந்து அந்தப் பணியை மேற்கொள்ள ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. கரோனா தொற்று காலத்தில் பயணிகளுக்கு சிறந்த சேவை வழங்கமேற்கொண்ட நடவடிக்கைக்கு நற்சான்றிதழ் அளிப்பதாக இந்த அங்கீகாரம் உள்ளது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையிலும், பயணிகள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.