Published : 12 Feb 2022 05:47 AM
Last Updated : 12 Feb 2022 05:47 AM

கீழடி 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; இந்தியில் வெளியான தகவல் அட்டை

கீழடி, கொந்தகை, கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளில் அடுத்தகட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். அருகில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுற்றுலாத்துறை செயலர் பி.சந்திரமோகன் உள்ளிட்டோர்.

சென்னை: கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தது குறித்து செய்தித்துறை சமூக வலைதள பக்கங்களில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் தகவல் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக அரசு தொடர்ந்து இருமொழிக் கொள்கையை வலியுறுத்தி வரும் நிலையிலும் இந்தி திணிப்புக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் நிலையிலும் அதன் வெளியீட்டிலேயே இந்தி மொழி இடம் பெற்றிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய பகுதிகளில் அடுத்தகட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டம் கீழடி, அதை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளில் 8-ம் கட்டமாகவும், தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் 3-ம் கட்டமாகவும், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் 2-ம் கட்டமாகவும் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, தருமபுரி மாவட்டம் பெரும்பாலையில் முதல் கட்டமாகவும் என 7 இடங்களில் அகழாய்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜன.20-ம் தேதி அறிவித்தார்.

அதன்படி, சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் - மாளிகைமேடு ஆகிய 2 அக ழாய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத் தில் இருந்தபடி காணொலி மூலமாக தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுற்றுலா துறை செயலர் பி.சந்திரமோகன், சிவகங்கையில் இருந்து காணொலி வாயிலாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், கீழடியில் இதுவரை கண் டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானங்களின் தொடர்ச்சியாக, மேம்பட்ட சமூக மக்கள் வாழ்ந்ததற்கான தொல்பொருட்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு வணிக தொடர்புக்கான கூடுதல் சான்றுகளை தேடி 8-ம் கட்ட அகழாய்வு நடைபெறும். சிவகளையில் தண்பொருநை (தாமிர பரணி) ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ் சமூகத்தினரின் மேம்பட்ட பண்பாடு 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதி செய்ய கூடுதல் சான்றுகளை தேடி அகழ்வு மேற்கொள்ளப்படும். கிருஷ்ணகிரி, மயிலாடும்பாறை அகழாய்வு மூலம் புதிய கற்கால மனிதர்களின் வேளாண்மை நடவடிக்கைகள் நிரூபிக் கப்படும்.

முதலாம் ராஜேந்திர சோழனின் தலை நகரான கங்கைகொண்ட சோழபுரத்தில் நகரமைப்பு மற்றும் மண்ணில் புதைந் துள்ள கட்டுமானங்களை வெளிக் கொணர்ந்து அரண்மனையின் வடி வமைப்பை தெரிந்து கொள்வது இந்த அகழாய்வின் நோக்கம். திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் இருந்து 2.5 கி.மீ. தொலைவில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது. நம்பி ஆற்றின் கரையில் இரும்புக் கால பண்பாட்டின் வேர்களைத் தேடி அகழாய்வு நடத்தப்படும்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் 25 ஏக்கர் பரப்பிலான தொல்லியல் மேட்டில், காலவாரியாக தொடர்ச்சியாக நிலவிய நிலவியல் உருவாக்கத்தின் பின்னணியில் அதிக எண்ணிக்கையிலான நுண்கற்கருவி களை சேகரிப்பதே அகழாய்வின் நோக் கம். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பெரும்பாலையில் பாலாற்றின் கரைகளில் இரும்புக்கால பண்பாட்டின் வேர்களைத் தேடி அகழாய்வு மேற் கொள்ளப்படும்.

கங்கைச் சமவெளியில் நிலவியது போன்ற நகர நாகரிகம் மட்டுமின்றி படிப்பறிவும், எழுத்தறிவும் கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் இருந்தது என்பதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது. ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை ஆகிய தொன்மை வாய்ந்த ஊர்களை பெற்றுள்ள தண் பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து புதிதாக திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, தருமபுரி மாவட்டம் பெரும்பாலையிலும் அக ழாய்வு நடத்தப்பட உள்ளது. இந்த நிதி ஆண்டில் ரூ.5 கோடியில் மேற்கண்ட 7 தொல்லியல் அகழாய்வுகள், 2 கள ஆய்வுகள், சங்ககால கொற்கை துறை முகத்தை அடையாளம் காணும் முன்களப் புல ஆய்வுப் பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x