Published : 12 Feb 2022 07:56 AM
Last Updated : 12 Feb 2022 07:56 AM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களும் காலை 6 முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஊர்வலம், சைக்கிள் பேரணி நடத்த விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக நடக்க உள்ளது. தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 606 பதவிகளுக்கு மொத்தம் 57,772 வேட்பாளர்கள் போட்டியிடுகின் றனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
திமுக வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட வாரியாக காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நேரடி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரச்சாரம் நிறைவடைய இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் வாக்கு சேகரிப்பில் அனைவரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே, பிரச்சாரத்துக்கான நேர கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் நேற்று முதல் தளர்வு வழங்கி இருப்பது கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தேர்தலில் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பிரச்சாரம் செய்ய ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, காலை 8 முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது நேற்று முதல் இந்த கட்டுப்பாட்டில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் தேர்தல் பிரச்சாரத் துக்காக மேற்கொள்ளப்படும் சாலை நிகழ்ச்சிகள், பாத யாத்திரை, சைக்கிள் பேரணி, ஊர்வலங்கள் ஆகியவற்றுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள் ளது. தேர்தல் நடத்தை விதி களில் கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய அலுவலரிடம் அனுமதி பெற்று சைக்கிள் பேரணி மற்றும் ஊர்வலம் உள்ளிட்டவற்றை நடத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கான அனுமதிகளை வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நட்சத்திர பேச்சாளர்கள்
அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து, ஒப்புதலை பெற்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். பிரச்சாரத்தின்போது கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிப்பதை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளில் மாநில அளவில் விளம்பரம் வெளியிட, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் விண்ணப்பம் செய்து முன்அனுமதி பெற வேண்டும். அக்குழுவிடம், உத்தேசிக் கப்பட்டுள்ள விளம்பரத்தின் இரு மாதிரி நகல்களோடு உரிய முறையில் விண்ணப்பம் செய்து அனுமதி பெற்ற பின்னர் மட்டுமே விளம்பரம் செய்ய வேண்டும்.
மாவட்ட அளவில் வெளியிடப் படும் விளம்பரத்துக்கான அனுமதியை தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் (மாவட்ட ஆட்சியர்கள்) அலுவலகங்களில் செயல்படும் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன்அனுமதி பெற்று வெளியிட வேண்டும். அவ்வாறு வழங் கப்படும் அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி விளம்பர எண் மற்றும் நாள் ஆகியவை விளம்பரப் பகுதியில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகங்களுக்கு கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள மாதிரி தேர்தல் நடத்தை விதிகளின்படி, வேட்பாளர்களின் தற்காலிக தேர்தல் அலுவலகங்கள் அமைக்க மாவட்ட ஆட்சியர்களிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT