Published : 12 Feb 2022 08:21 AM
Last Updated : 12 Feb 2022 08:21 AM
சென்னை: ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல்தளர்வுகள் அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் வரும் 14-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்தது. இதையடுத்து, ஜன.6-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஜன.9-ம் தேதி முதல் ஞாயிறு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்ததால், ஞாயிறு ஊரடங்கு ஜன.16, 23-ம் தேதிகளிலும் நீட்டிக்கப்பட்டது.
அதன் பிறகு, கரோனா பாதிப்பு குறைந்ததாலும், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதாலும், இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ஆகியவை ரத்து செய்யப்பட்டன. வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது. பிப்.1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இருப்பினும், பிப்.15-ம் தேதிவரை 16 வகையான செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது.
மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்படவும், அரசு, தனியார் கலை விழாக்கள், பொருட்காட்சிகள் நடத்தவும் அனுமதி இல்லை. உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள், உறைவிடங்கள், ஜவுளி,நகைக் கடைகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். திரையரங்குகளிலும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
இந்த கட்டுப்பாடுகள் வரும் 15-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தற்போது கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், இந்த கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் வரும் 14-ம்தேதி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு, கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக 3,086 பேருக்கு தொற்று
இதற்கிடையில், தமிழகத்தில் புதிதாக 3,086 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,840, பெண்கள் 1,246 என மொத்தம் 3,086 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 590,கோவையில் 569 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 31,154ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 33 லட்சத்து 37,265 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 14,051 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
25 பேர் உயிரிழப்பு
தமிழகம் முழுவதும் 56,002 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 25 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 6 பேர் இறந்துள்ளனர்.
இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,887 ஆகஉயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 9,043 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் கரோனா பாதிப்பு 3,592 ஆகவும், சென்னையில் 663 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT