

மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில், கோவை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ‘வாக்காளருக்கு பணம் கொடுக்க மாட்டோம். இந்த நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றுவது என் கடமை’ என உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, சுந்தராபுரத்திலுள்ள சங்கம் வீதியில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வே.ஈஸ்வரன் தலைமை வகித்தார். இதில் குறிச்சி பகுதிக்குட்பட்ட சில வார்டுகளை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், பாஜகவைச் சேர்ந்த 3 வேட்பாளர்கள், தேமுதிகவைச் சேர்ந்த 2 வேட்பாளர்கள், மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த 5 வேட்பாளர்கள், அமமுகவைச் சேர்ந்த ஒரு வேட்பாளர், பாமகவைச் சேர்ந்த 2 வேட்பாளர்கள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளர், 11 சுயேச்சை வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.