Last Updated : 15 Apr, 2016 10:07 AM

 

Published : 15 Apr 2016 10:07 AM
Last Updated : 15 Apr 2016 10:07 AM

பாஜகவுடன் வாசன் நெருங்குகிறார் என அச்சப்பட்டோம்: பீட்டர் அல்போன்ஸ் சிறப்புப் பேட்டி

பாஜகவுடன் நெருங்குகிறார் வாசன் என அச்சப்பட்டதால் தமாகாவில் இருந்து விலகும் கட்டாயம் ஏற்பட்டதாக காங்கிரஸில் மீண்டும் இணைந்துள்ள பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

தமாகா தொடங்கிய பிறகு முதல் தேர்தலை சந்திக்கும் நேரத்தில் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளீர்களே?

தமாகா என்பது, தமிழக நலனை முன்னிறுத்தவும் காமராஜர், மூப்பனார் காட்டிய மதச்சார்பின்மை பாதையில் ஜி.கே.வாசனை முதல்வராக்க வேண்டும் என்பதற்காகவும் தொடங்கப்பட்ட கட்சி. இந்திய தேசிய காங்கிரஸுக்கு எதிரான இயக்கமல்ல. ஆனால், அந்தப் பாதையில் இருந்து விலகி விஜய காந்தை வாசன் முதல்வராக ஏற்றுக் கொண்டதால் வேறு வழியின்றி விலக நேர்ந்தது.

காங்கிரஸ் மீது இந்த அளவுக்கு பற்று கொண்ட நீங்கள். 2014 தேர்தலில் தோற்று இக்கட்டான நிலையில் இருக்கும்போது ஏன் விலகினீர்கள்?

தேசிய நலனுக்காகவும், மதவாதத்தை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவும் பல நேரங்களில் மாநில நலன்களை விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு ஏற்படுகிறது. இதனால், தமிழகம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸால் வளர முடியவில்லை. எனவேதான் காங்கிரஸை மாநிலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை என்னைப் போன்றவர்கள் முன்வைத்தோம். இதே காரணத்துக்காகத்தான் ஸ்தாபன காங்கிரஸை காமராஜரும், தமாகவை மூப்பனாரும் தொடங்கினர். ஆனால், இருவரது திடீர் மறைவினால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதே முயற்சியை மீண்டும் வாசன் தொடங் கியதால் அவருடன் இணைந்தோம்.

இப்போது அந்தப் பாதையில் இருந்து வாசன் விலகிவிட்டார் என்கிறீர்களா?

தமாகா தொடங்கப்பட்ட சில மாதங்களில், ‘மதச்சார்பற்ற இந்தியா’ என்ற கருத்தரங்கை நடத்தினோம். அதில் பேசிய பிருந்தா காரத், வாசனை தமிழகத்தின் எதிர்காலம் என்றார். இதுபோன்ற கருத்தரங்கை தமிழகம் முழுவதும் நடத்தி வாசன் தலைமையில் மாற்று அணி அமைக்க முயன்றோம். முதலில் இதற்கு சம்மதித்த வாசன், பிறகு மறுத்துவிட்டார். இடதுசாரிகளுடன் சேர்ந்தால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியாது என சிலர் அவரது மனதை மாற்றிவிட்டனர்.

ஆனால், அதிமுகவுடன் கூட்டணி என்ற பாதையில்தானே தமாகா பயணித்தது?

வாசன் உள்ளிட்ட பலர் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என விரும்பியது உண்மைதான். ஆனால், அதிமுக இல்லாவிட்டல் என்ன செய்வது என்பது குறித்து யாரும் யோசிக்க வில்லை. அதுதான் பிரச்சினை.

விஜயகாந்தை ஏற்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்?

விஜயகாந்த் அணியில் வைகோ இருக்கிறார். அவரது கொள்கைகளோடு எங்களால் ஒருகாலத்திலும் உடன்பட முடியாது.

திமுகவுடன் கூட்டணி அமைக் காததால் நீங்கள் வெளியேறியதாக தமாகாவில் சிலர் குற்றம்சாட்டுகிறார்களே?

தவறான குற்றச்சாட்டு. திமுக கூட்டணியில் தமாகா இணையும் என்று செய்திகள் வந்தபோது, நாங்கள் காங்கிரஸை விட்டு விலகி வெகுதூரம் வந்துவிட்டோம் என்றார் வாசன். தேசிய அரசியலில் ஆர்வம் கொண்ட அவர் இப்படி பேசியது என்னைப் போன்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற் படுத்தியது.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் அரசியலே காங்கிரஸ் - பாஜக என இரு துருவங்களாக மாறப்போகிறது. மதவாத பாஜகவை வீழ்த்த இடதுசாரிகள்கூட காங்கிரஸ் அணிக்கு வரப்போகிறார்கள். அப்படி ஒரு சூழல் உருவாகும்போது வாசன் எந்த அணியில் இருப்பார் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனால்தான் நாங்கள் தமாகாவில் இருந்து விலகினோம்.

அப்படியானால் வாசன் பாஜகவை நெருங்கிச் செல்கிறார் என்கிறீர்களா?

அப்படியொரு அச்சம் எங்களுக்கு வந்துவிட்டது. தமாகா மூப்பனார் தொடங்கியபோது எங்களின் அகில இந்திய தலைமை சோனியா காந்திதான் என அறிவித்தார். 1999-ல் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோதுகூட மூப்பனார் பாஜகவுடன் சேரவில்லை. அகில இந்திய அளவில் அவர் காங்கி ரஸுக்கு எதிராக சிந்தனை செய்ததுகூட இல்லை.

மூப்பனார் - வாசன் இருவரையும் ஒப்பிட முடியுமா?

மற்றவர்களின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்ப முடிவுகளை எடுப்பார் மூப்பனார். கட்சியில் ஒவ்வொருவரின் திறமைகளை யும் தெரிந்துகொண்டு அதை வெளிப் படுத்த களம் அமைத்துக் கொடுப்பார். ஒருவர் சாப்பாட்டு பிரியர் என்றால் கட்சி மாநாட்டில் சமையல் பொறுப்பை அவரிடம்தான் கொடுப்பார். எனவே, அவரோடு யாரையும் ஒப்பிட விரும்ப வில்லை.

வாசன் தந்தையிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறார். இன்னும் நிறைய கற்க வேண்டும்.

தேர்தலில் போட்டியிடவே தயங்கும் வாசன், காங்கிரலிருந்து விலகி தனிக் கட்சி தொடங்கியது ஏன்?

தினமும் உறங்கும் முன்பு இந்தக் கேள்வியைதான் எனக்கு நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x