Published : 12 Feb 2022 07:27 AM
Last Updated : 12 Feb 2022 07:27 AM

கந்தசுவாமி கோயிலில் நாளை தேரோட்ட உற்சவம் : ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவத்தைஒட்டி நாளை திருத்தேரோட்ட உற்சவம் நடைபெற உள்ளதால், ஓஎம்ஆரில் சாலைப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில், நாள்தோறும் பல்வேறுவாகனங்களின் மீது முருகப்பெருமான் எழுந்தருளி மாடவீதிகளில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், 5-ம் நாளான நேற்று மங்களகிரியின் மீது வள்ளி, தெய்வானையுடன் கந்தசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், முக்கிய வீதிகளில் உலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நாளை (பிப்.13) திருத்தேரோட்ட உற்சவம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக, ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், மாமல்லபுரம், ஆலத்தூர் வழியாகவரும் வாகனங்கள், கிரிவலப்பாதை வழியாக காலவாக்கம் சென்று ஓஎம்ஆர் சாலையில் இணைந்து செல்லலாம்.

செங்கல்பட்டு, ஆலத்தூர் வழியாக வரும் பேருந்துகள் நகருக்கு வெளியே நிறுத்தி இயக்கப்படும். சென்னையிலிருந்து, கேளம்பாக்கம் வழியாக ஓஎம்ஆர் சாலையில் கோயிலுக்கு வரும் வாகனங்கள் நகருக்கு வெளியே புதியபுறவழிச்சாலை மூலம் கோயிலுக்குச் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக, மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதீஸ்வரன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x