Published : 12 Feb 2022 07:38 AM
Last Updated : 12 Feb 2022 07:38 AM
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் 2-வதுவார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில்போட்டியிடுபவர் ஆர்.தினகரன். இவர் அந்தப் பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வேட்பாளர் மற்றும் அவருடன் இருவர் மட்டுமே சென்று வாக்கு சேகரித்து வந்தனர்.
இந்நிலையில் தினகரன் நேற்று அனகாபுத்தூர் பகுதிக்கு வாக்கு சேகரிக்கச் சென்றார். இவர் அங்கு பாலாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் வாக்கு கேட்டுவிட்டு வெளியே வந்தார். அங்கு தெருநாய்கள் அதிகம் இருந்தன. அப்போது ஒரு தெரு நாய் வேகமாக இவரை நோக்கி ஓடிவந்தது. இவர் சுதாகரித்து ஓடுவதற்குள் இவரது காலை கவ்வி கடித்தது. இதில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால், பாதியில் பிரச்சாரத்தை நிறுத்திய அவர் நாய்க்கடி தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இதுகுறித்து வேட்பாளர் தினகரன் கூறும்போது, “அனகாப்புத்தூர் பகுதியில் தெரு நாய்கள் அதிகம் உள்ளன. இந்த பகுதிதற்போது தாம்பரம் மாநகராட்சியில் உள்ளது. இதற்கு முன்னர் தாம்பரம் நகராட்சியில் இருந்தது. அப்போது நாய்களை முறையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.
பிரச்சாரத்துக்கு செல்லும்போது வேட்பாளரை நாய் கடித்த சம்பவம் அனகாபுத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரை நாய் கடித்ததால் மற்ற வேட்பாளர்கள் இந்தப் பகுதியில் வாக்கு சேகரிக்க வரும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT