

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் தொகுதியில் அதிமுக கடந்த நான்கு தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் தற்போது அத்தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. இதில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் மட்டும் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.
1996 முதல் கடந்த இருபது ஆண்டுகளாக அர. சக்கரபாணி அந்த தொகுதி எம்எல்ஏவாக வலம் வருகிறார். அத்தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டும், அதிமுக வேட்பாளர்களால் அவரை வெற்றி கொள்ள முடியவில்லை.
இதற்கான காரணம் குறித்து, கட்சித் தலைமை தீவிரமாக விசாரித்தது. இதில் சக்கரபாணி எம்எல்ஏ மக்களிடம் அணுகும் முறை ஒரு காரணமாக இருந்தாலும், அதிமுகவினரிடையே தொடரும் கோஷ்டிப் பூசலும் ஒரு காரணம் என தெரியவந்தது. அதிமுகவில் ஒரு தரப்பினருக்கு வாய்ப்பு கொடுத்தால், வாய்ப்பு கிடைக்காத மறுதரப்பினர் தனது கட்சி வேட்பாளரையே காலை வாருவதும் தெரியவந்தது.
கடைசியாக ஒட்டன்சத்திரம் தொகுதி நேர்காணலுக்கு அதிமுக சார்பில் மூன்று பேர் அழைக்கப்பட்டனர். இதில் பங்கேற்ற ஏற்கெனவே இத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவர், எனக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் நடப்பதை சொல்கிறேன் என விளக்கமாக உள்ளூரில் நடக்கும் கோஷ்டி அரசியலைச் சொல்லிவிட்டு, கடந்தமுறை தான் திமுகவிடம் தோற்றதற்கும் அதிமுகவில் உள்ள இருவர்தான் காரணம் என்றும் சொல்லிவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன்விளைவாக, ஒட்டன் சத்திரம் தொகுதியில் யாரை நிறுத்தினாலும் வெற்றிபெறுவது கடினம் என நினைத்த கட்சித் தலைமை அத்தொகுதியை கூட்டணிக் கட்சியான மனித நேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கி விட்டதாகக் கூறப்படுகிறது.