

தஞ்சாவூர் மகர்நோன்புச்சாவடி வாணக்காரத் தெருவில் நேற்று பாஜக வேட்பாளரை ஆதரித்து பாஜக மாநில முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
இந்தத் தேர்தல் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தமிழகத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் வகையில் இந்தத் தேர்தலை பாஜக சந்தித்து வருகிறது.
அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், குடிநீர், சமையல் எரிவாயு, திருமண நிதி உதவி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி உட்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் நிறைவேற்றி வருகிறார்.
தஞ்சாவூரில் பிரதமரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்பாட்டு பணிக்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த அளவுக்குப் பணிகள் சிறப்பாக நடைபெறவில்லை. இதை சரி செய்யும் வகையில் பாஜக வெற்றி பெற வேண்டும்.
தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது நகைக் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு கோரிய பெண்ணை மிக மோசமாக விமர்சனம் செய்துள்ளார். இதற்காக உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக, தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் பிரச்சாரம் செய்த அவர், சாலையோரத்தில் குப்பைகளை கூட்டி, தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.