Published : 28 Apr 2016 02:09 PM
Last Updated : 28 Apr 2016 02:09 PM

புதுச்சேரி ஐஎன்டியுசி அலுவலகத்தில் குக்கர், நான்ஸ்டிக் தவாக்கள் பறிமுதல்: திமுக வேட்பாளர் உறவினரிடம் ரூ.10.39 லட்சம் சிக்கியது

புதுச்சேரியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் திமுக வேட்பாளரின் உறவினர்களிடம் இருந்து ரூ.10.39 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐஎன்டியுசி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 210 குக்கர்கள், 419 நான்ஸ்டிக் தவாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி செயின்ட் தெரஸ் தெருவில் உள்ள காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐஎன்டியுசி தலைமை அலுவலகத்தில் குக்கர்கள், நான்ஸ்டிக் தவாக்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும்படை அலுவலர் ராமச்சந்திரய்யா தலைமையிலான அதிகாரிகள் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.

அங்கு, 210 குக்கர்கள், 419 நான்ஸ்டிக் தவாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சத்து 23 ஆயிரத்து 80 ஆகும். உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்தனர். அவை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்ததா என்றும் விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக ஐஎன்டியுசி நிர்வாகிகள் ஞானசேகரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது காவல்துறையினரிடம் பறக்கும்படையினர் புகார் செய் துள்ளனர்.

ரூ.10.32 லட்சம் பறிமுதல்

முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோயில் பகுதியில் வந்த ஒரு காரை, தேர்தல் பறக்கும்படை அதிகாரி மாசிலாமணி தலைமையிலான அதிகாரிகள் நேற்று சோதனையிட்டனர். அந்த காரில், திமுக கரை போட்ட 5 துண்டுகள், 5 தாம்பூலப்பைகள் இருந்தன. காரில் வந்த இருவரிடம் ரூ.10.39 லட்சம் ரொக்க பணம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, கார் மற்றும் காரில் வந்தவர்களை முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். வருமானவரித் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், காரில் வந்தவர்கள் உப்பளம் தொகுதி திமுக வேட்பாளர் அனிபால் கென்னடியின் நெருங்கிய உறவினர்களான, அனிபால் அந்துவான், அன்மேரி ஷங்கர் என்பது தெரியவந்தது.

பிரான்ஸில் உள்ள தங்கள் மகன்கள் அவர்களின் வங்கி கணக்குக்கு அனுப்பிய பணம் என்றும், தங்களை் வீட்டை புதுப்பிப்பதற்காக அனுப்பபட்ட பணம் என்றும் இப்பணத்தை வில்லியனூர் பாரதியார் கூட்டுறவு வங்கியில் இருந்து எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். வங்கிக்கணக்கு புத்தகத்தில் பதிவு செய்வதற்கு சிறிது நேரம் ஆகும் என கூறியதால் அவர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு வந்துவிட்டதாக தெரிவித்தனர். பணத்துக்கான உரிய ஆவணங்களை அளித்த பின்பு பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு பறக்கும்படையினர் அறிவுறுத்தி அனுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x