

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது என இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டினார்.
திருப்பத்துார் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், திருப்பத்துார் நகராட்சியின் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின்மாநில செயலாளர் முத்தரசன் திருப்பத்தூரில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது குறித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வால் பாதிக்கப்படும் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவர்கள் கொல் லப்பட்டிருக்கிறார்கள்.
நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது. பாஜக அரசை பகைத்து கொள்ளக்கூடாது என்பதற்காக இது போன்ற நாடகத்தை அதிமுக அரங்கேற்றி வருகிறது. பாஜகவினர் குறுகிய அரசியல் நோக்கத்தோடு மத மோதல்களை உருவாக்குவதன் மூலமாக அரசியல் ஆதாயங்களை தேடுகின்றனர்.
குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வினர் கலவரத்தை உருவாக்கி ஆட்சிக்கு வந்துள்ளார்கள். தற்போது, கர்நாடகாவிலும் அதே பாணியை கையில் எடுத்துள்ளனர்.அங்கு பாஜக ஆட்சியில் உள்ளதால் இதுபோன்ற சம்பவங்கள் அங்கு சர்வசாதாரணமாக நடக்கிறது’’ என்றார்.