Published : 12 Feb 2022 09:42 AM
Last Updated : 12 Feb 2022 09:42 AM
திருப்பத்தூர்: திருப்பத்துார் மாவட்டத்தில் சாராயம் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திருப்பத்துார் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று பொது ஏலம் விடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பால கிருஷ்ணன் தலைமை வகித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பாராஜூ, துணை காவல் கண்காணிப்பாளர்கள் சாந்தலிங்கம் (திருப்பத்தூர்) தீபாசுஜிதா (பயிற்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏலம் எடுக்க வந்தவர்கள் நேற்று முன்தினம் அதற்கான டோக்கனை பெற்றிருந்தனர். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலம் நடைபெறும் இடத்துக்கு நேற்று அனுமதிக்கப்பட்டனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய ஏலம் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. இறுதியாக 79 இரு சக்கர வாகனங்கள், 11 நான்கு சக்கர வாகனங்கள் என 90 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் 32 லட்சத்து 2 ஆயிரத்து 290 ரூபாய் ஏலத்தொகை பெறப்பட்டது.
வாகனங்களை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் இரு சக்கர வாகனங்களுக்கு 12 சதவீதமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதமும் விற்பனை வரி சேர்த்து செலுத்தினர். அதற்கான ரசீது வழங்கப்பட்டது. இந்த ரசீதே ஏலம் எடுத்த வாகனங்களுக்கான ஆவணம் என காவல் துறையினர் தெரிவித்தனர். வாகனங்கள் ஏலம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டதால் ஏலம் நடைபெறும் இடம் திருவிழா போல் இருந்தது. கரோனா பரவல் நடைமுறையில் இருப்பதால் ஏலம் நடைபெறும் இடத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. இதனை காவல் துறையினரும் கண்டுகொள்ளவில்லை.
ஏலம் எடுக்க வந்த 70 சதவீதம் பேர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒரே இடத்தில் கூடியதால் கரோனா பரவல் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கும் காவல் துறையினர், அவர்கள் நடத்தும் நிகழ்வில் கரோனா விதிகளை மீறியது விதிமீறல் இல்லையா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT