Published : 11 Apr 2016 05:41 PM
Last Updated : 11 Apr 2016 05:41 PM

மதுவிலக்கு: கருணாநிதியை விமர்சித்து ஜெ. குட்டிக் கதை

விருத்தாசலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா திமுக-வின் மதுவிலக்குக் கொள்கையை விமர்சித்து குட்டிக் கதை ஒன்றைக் கூறினார்.

மதுவிலக்கு குறித்து ஜெயலலிதா குறிப்பிட்டதாவது:

எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும். முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை நாம் அடைவோம்.

இப்போது அனைவரும் இந்த மதுவிலக்கு கொண்டு வருவதைப் பற்றிப் பேசுகிறார்கள். குறிப்பாக, திரு. கருணாநிதி மிகவும் அதிகமாக இதைப் பற்றிப் பேசுகிறார். யார் வேண்டுமானாலும் மதுவிலக்கு பற்றி பேசலாம். ஆனால், திரு. கருணாநிதி பேசக்கூடாது; திமுக-வினர் பேசக்கூடாது. அதைப் பற்றிப் பேசுகின்ற அறுகதை திரு. கருணாநிதிக்கும் இல்லை; திமுக-வுக்கும் இல்லை. பூரண மதுவிலக்கு தமிழ் நாட்டில் அமலில் இருந்தது. அதனை நீக்கியவரே திரு. கருணாநிதி தான். 1971-ஆம் ஆண்டில் பூரண மதுவிலக்கை நீக்கியதே திரு. கருணாநிதி தான். ஒரு தலைமுறையையே குடிப் பழக்கத்திற்கு ஆட்படுத்தியவர் திரு. கருணாநிதி தான். அந்தக் கருணாநிதி இன்றைக்கு மற்ற கட்சித் தலைவர்களுடன் சேர்ந்துகொண்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; அமல்படுத்த வேண்டும் என்று கூக்குரல் இடுகிறார் என்றால் ஒரு கதை தான் நினைவுக்கு வருகிறது.

ஒருவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வேறு ஒருவரை கொலை செய்துவிட்டார். சாவு ஏற்பட்டது. ஏதோ சில காரணங்களினால் அந்த இடத்தைவிட்டு இவர்களால் ஓட முடியவில்லை. அதான் கொலையாளியும், அவர் கூட்டாளிகளும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அப்போது, கொலை செய்யப்பட்டவரின் உற்றாரும், உறவினர்களும், நண்பர்களும் அங்கே ஓடி வந்தனர். அய்யோ நண்பா நீ போய்விட்டாயா, அய்யோ மகனே நீ போய்விட்டாயா என்று மற்றவர்கள் கூக்குரலிட்டு அழுகின்ற போது, இந்தக் கொலையாளியும், அவரது நண்பர்களும் சேர்ந்து அய்யோ நண்பா நீ போய்விட்டாயா என்று கதறி, அழுது ஒப்பாரி வைத்தார்களாம். அது போல இருக்கிறது கருணாநிதி மதுவிலக்கைப் பற்றிப் பேசுவது.

இவ்வாறு அந்தக் குட்டிக் கதையில் தெரிவித்தார் ஜெயலலிதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x