

சென்னை: முதல்வர் இல்லாமல் இயங்கி வரும் புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியின் அங்கீகாரத்தை திரும்ப பெறும்படி இந்திய பார் கவுன்சிலுக்கு ஏன் உத்தரவிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியில் காலியாக உள்ள முதல்வர், பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வர் இல்லாமல் செயல்படும் சட்டக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை திரும்ப பெறும்படி பார் கவுன்சிலுக்கு ஏன் உத்தரவிடக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு புதுச்சேரி அரசுத் தரப்பில், பொன் விழா கொண்டாட உள்ள இந்தக் கல்லூரியில் படித்த 15-க்கும் மேற்பட்டோர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருந்துள்ளனர். அங்கீகாரத்தை திரும்பப் பெற்றால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், 17 காலிப் பணியிடங்களில் 7 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், கல்லூரியில் விரிவுரையாளர், பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.