காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரத்துக்கு அனுமதி: சைக்கிள் பேரணி, ஊர்வலங்களுக்கான தடை நீக்கம்

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரத்துக்கு அனுமதி: சைக்கிள் பேரணி, ஊர்வலங்களுக்கான தடை நீக்கம்
Updated on
1 min read

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், சாலை நிகழ்ச்சிகள், பாதயாத்திரை, சைக்கிள் பேரணி மற்றும் ஊர்வலங்கள் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடைக்கு தளர்வு அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி சாதரணத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி சாதரண தேர்தல் தொடர்பாக ஏற்கெனவே இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பிரச்சாரம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பரப்புரை நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மேற்கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக மேற்கொள்ளப்படும் சாலை நிகழ்ச்சிகள், பாதயாத்திரை, சைக்கிள் பேரணி மற்றும் ஊர்வலங்கள் ஆகியவற்றிற்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த தடைக்கு தளர்வு அளிக்கப்படுகிறது. மாதிரி நடத்தை விதிகளில் கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய அலுவலரிடம் அனுமதி பெற்று மேற்கண்ட நிகழ்வுகளை மேற்கொள்ள உரிய அனுமதி வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் / மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு முன்கூட்டியே தெரிவித்து, அவரது ஒப்புதலை பெற்று பிரச்சாரம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பரப்புரையின்போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in