Published : 11 Feb 2022 01:13 PM
Last Updated : 11 Feb 2022 01:13 PM

'நீட்' சரித்திரம்... பொது மேடையில் விவாதிக்க நாங்கள் தயார்: ஸ்டாலின் சவாலை ஏற்ற பழனிசாமி

மதுரை: "நீட் தேர்வு எந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது, யாருடைய ஆட்சியிலே அது வருவதற்கு நச்சு விதை தமிழகத்தில் ஊன்றப்பட்டது. நாங்கள் விவாதத்திற்கு வரத் தயார்" என்று மதுரை பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சவாலுக்கு, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் சவால் விடுத்துள்ளார்.

மதுரை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று காலை கே.புதூர் பொதுக்கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான கே.பழனிசாமி பேசியது: "உள்ளாட்சி அமைப்பு என்பது மக்களுக்கு சேவை செய்யக்கூடிய சிறந்த அமைப்பு. சாலை வசதி, கழிவு நீர் அகற்றுதல், தெருவிளக்கு, குடிநீர் பிரச்சினை மற்றும் குப்பை அகற்றுதல் போன்ற மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய பொறுப்பு மேயர், கவுன்சிலர்களுக்கு உள்ளது. அன்றாட தேவையை நிறைவேற்றுவது என்பது சாதாரண விஷயமில்லை.

தமிழகத்தில் அரசியல் முக்கியத்துவம் பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க மாநகராட்சியாக மதுரை திகழ்கிறது. இந்த மாநகராட்சியை வெற்றிப் பெறுவது அதிமுகவுக்கு கவுரவப் பிரச்சினை. அதை உணர்ந்து தொண்டர்கள், நிர்வாகிகள் ஒருங்கிணைந்து அதிமுக வேட்பாளர்களை வெற்றிப்பெற வைக்க வேண்டும். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தங்களுடைய இறுதிமூச்சு வரை பாடுப்பட்டார்கள். அவர்கள் கண்ட கனவை நிறைவேற்ற அவர்கள் நேசித்த மதுரை மாநகராட்சியை அதிமுக கைப்பற்ற வேண்டும்.

அதிமுகவை சேர்ந்தவர் மேயராக வந்தால்தான் நாம் ஏற்கெனவே கொண்டு வந்த திட்டங்களை செம்மைப்படுத்தி, சீர்படுத்தி நிறைவேற்ற முடியும். திமுகவைச் சேர்ந்தவர்கள் வந்துவிட்டால் கொள்ளையடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்த 9 மாதம் கால ஆட்சியில் அவர்கள் அதைதான் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஊழல் இல்லாத துறையே இல்லை. மக்களுக்கு நன்மை செய்வதற்காக இவர்கள் ஆட்சிக்கு வரவில்லை.

ஸ்டாலின் பல்வேறு சவால்களை விடுகிறார். காணொலி காட்சி தேர்தல் பிரச்சாரத்தில் அவர், எடப்படி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ‘நீட்’ தேர்வை பற்றி விவாதிக்க என்னுடைய சவாலை ஏற்று வருவீர்களா? என்று கேட்டுள்ளார். நிச்சயமாக அவரது சவாலை ஏற்கிறோம். ‘நீட்’ தேர்வு எந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது, யாருடைய ஆட்சியிலே அது வருவதற்கு நச்சு விதை தமிழகத்தில் ஊன்றப்பட்டது. நாங்கள் விவாதத்திற்கு வரத் தயார்.

ஒரு பொதுவான இடத்திலே நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள். ஊடக நண்பர்கள், பத்திரிகை நண்பர்களை வரவழைத்து ‘நீட்’ தேர்வை பற்றி அலசி ஆராய்ந்து நீங்களும் பேசுங்கள். நாங்களும் பேசுகிறோம். மக்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பை வழங்கட்டும். யாரை ஏமாற்றுகிறீர்கள். எதையாவது சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறீர்கள். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நீங்களும் உங்கள் மகனும் அனைத்து கூட்டத்திலும் திமுக ஆட்சியில் அமர்ந்ததும் முதல் கையெழுத்து ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினீர்கள். ஆட்சிக்கு வந்து 9 மாதங்களை கடந்துவிட்டது. ஏன் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. பச்சைப் பொய். பேசுவது அனைத்தும் பொய். நான் ஏற்கெனவே பல பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளேன். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால் அதை ஸ்டாலினுக்கு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்.

அவரது மகன் உதயநிதி, சட்டசபை தேர்தலின்போது ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதற்கு என்னோட அப்பாவிடம் ரகசியம் இருக்கிறது என்றார். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த ரகசியத்தை வைத்து ‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னீர்கள். ஏன் இந்த 9 மாத ஆட்சிக் காலத்தில் அந்த ரகசியத்தை வைத்து ‘நீட்’ தேர்வை ரத்து செய்யவில்லை, மக்கள் கேட்கிறார்கள். ஸ்டாலின் பேசும்போது ‘எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ‘நீட்’ தேர்வை ரத்து செய்யும் ரகசியம் என்ன என்று கேட்கிறார், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய தொடர்ந்த வலியுறுத்தி அதை ரத்து செய்வதுதான் ரகசியம் ’என்கிறார்.

யாரை ஏமாற்றுகிற வேலை இது. இளைஞர்கள், பெண்கள், பெற்றோரை மாணவர்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார். திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, அமைச்சர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் பேசுவது அனைத்தும் பொய். உதயநிதி ஸ்டாலின் சொன்ன இப்படிப்பட்ட ரகசியத்தை அவரது தந்தை வெளியிட்டதற்கு அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம். இந்த ரகசியத்தை யாருமே கண்டுபிடிக்க முடியல பாருங்க. தந்தைக்கும், மகனுக்கும்தான் அந்த ரகசியம் தெரிந்து இருக்கிறது.

‘நீட்’ தேர்வு என்ற வந்தது எப்படி? - அதிமுக ஆட்சி காலத்தில்தான் ‘நீட்’ தேர்வு வந்ததாக ஒரு தவறான செய்தியை திமுக பரப்புகிறது. இந்தப் பொய்ச் செய்தியை பரப்புவது ஒரு நாட்டை ஆளும் முதல்வர் செய்கிறார் என்றால் மன்னிக்க முடியுமா?. இவர் எப்படி நாட்டை காக்க முடியும். 2010-ம் டிசம்பர் 21-ம் தேதிதான் இந்திய மருத்துவக் கவுன்சில் ‘நீட்’ தேர்வு பற்றி அறிவிப்பு வெளியிடுகிறார்கள். மத்தியில் இருப்பது காங்கிரஸ் ஆட்சி. அந்த ஆட்சியில் திமுக இடம்பெற்றுள்ளது. அதனால், ‘நீட்’ தேர்வை திமுகவும், காங்கிரசும் சேர்ந்துதான் கொண்டு வந்தது. இதை ஸ்டாலினே எனக்கு சவால் விடும்போது மறந்துபோய் ஒத்துக் கொண்டார். இனி அவர் மாற்றிப்பேச முடியாது. 2010-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் குலாம்நபி ஆசாத். திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டதில்தான் ‘நீட்’ தேர்வு என்ற நச்சு விதையை தமிழகத்தில் விதைத்தது திமுகவும், காங்கிரஸ் கட்சியும்.

அதன்பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி ‘நீட்’ தேர்வுக்கு எதிராக பல்வறு சட்டப் போராட்டங்களையும், கோரிக்கைகளையும் முன் வைத்தார். 2013-ம் ஆண்டில் 3 உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு, ‘நீட்’ தேர்வு வழக்கை எடுத்து விசாரித்தனர். அவர்கள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற தீர்ப்பை வழங்கினார்கள். அதோடு விட்டிருந்தால் பிரச்சினையில்லை. நீட் தேர்வும் வந்திருக்காது. அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் மறுசீராய்வு மனு போட்டது. அதில் அங்கம் வகித்தது திமுக. இதை ஸ்டாலின் மறுக்க முடியுமா?. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, மறுசீராய்வு மனு போடாதீர்கள், தடுத்து நிறுத்துங்கள் என்று கோரிக்கை வைத்தார். அன்றைய அதிமுக எம்பி செம்மலையிடம், ஜெயலலிதா ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தன்னுடைய கைப்பட எழுதிய கடிதத்தை கொடுத்து அனுப்பினார். ஆனால், காங்கிரஸும், திமுகவும் அதை கண்டுகொள்ளவில்லை. இதுதான் ‘நீட்’ தேர்வின் சரித்திரம்.

இது கூட தெரியாத முதல்வராக இருக்கிறார் ஸ்டாலின். உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து யார் சீராய்வு மனு போட்டார்கள் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், வேண்டுமென்றே நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை வெளியட்டு இன்று ஸ்டாலின் விழிபிதுங்கி நிற்கிறார். அதனால் உங்கள் சவாலை ஏற்று ‘நீட்’ தேர்வை பற்றி விவாதிக்கவும், பதில் அளிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தேர்தலுக்காக ஏதையாவது பேசாதீர்கள். மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் அதிமுக போட்டியிடுகிறார்கள். அதிமுக நூற்றுக்கு நூறு வெற்றிப்பெற வேண்டும். அதிமுக வெற்றிவிழாவில் மதுரையில் வந்து நான் பங்கு பெறுவேன்" என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x