

கிரானைட் கற்களை அரசுடமை யாக்கக் கோரும் வழக்கில் சர்ச்சைக் குரிய தீர்ப்பு வழங்கிய மேலூர் நீதித்துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) கே.வி.மகேந்திரபூபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தமிழகத்தை மிரள வைத்த பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை மாவட்டம் மேலூர், கீழவளவு, மேலவளவு, ஒத்தக்கடை ஆகிய காவல் நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை மேலூர் நீதித்துறை நடுவராக இருந்த கே.வி.மகேந்திரபூபதி விசாரித்து வந்தார்.
கிரானைட் முறைகேடு தொடர் பான 98 வழக்குகளில் கடுமை யான குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை மேலூர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறி ஞர்கள் தாக்கல் செய்தனர். அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை வழங்கக் கூடிய குற்றச்சாட்டுகளை விசார ணைக்கு ஏற்காமல், வெறும் திருட்டு பிரிவை மட்டும் விசாரணைக்கு ஏற்றார் மகேந்திரபூபதி.
இதனால் அவர், கிரானைட் முறைகேட்டில் தொடர்புடையவர் களுக்கு சாதகமாக செயல்படு வதாக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது, குற்றப்பத்திரிகையில் கூறப் பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத் தையும் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை செயல்படுத்தாததால், மகேந்திரபூபதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தை மீண்டும் நாடினர். இதையடுத்து, ‘மகேந்திரபூபதி தூங்குவது போல் நடிக்கிறார். அவர் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த பரபரப்பான சூழலில் கிரானைட் கற்களை அரசுடமையாக் கக் கோரி அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா 2013-ல் தாக்கல் செய்த 2 வழக்குகள் மகேந்திரபூபதி முன்பு மார்ச் 29-ல் விசாரணைக்கு வந்தன. வழக்கம்போல் 2 வழக்குகளும் ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்த்தபோது, அந்த வழக்குகளை தள்ளுபடி செய்தும், அதை தாக்கல் செய்த ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் மகேந்திரபூபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்ற நீதிபதி யால் நீதிமன்ற அவமதிப்பு நட வடிக்கைக்குப் பரிந்துரைக்கப்பட்ட நீதித்துறை நடுவர், கிரானைட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் களை விடுவித்தும், வழக்கு தொடர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது நீதித் துறையில் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கியது தொடர்பாக முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.எம்.பஷீர்அகமது, தலைமை குற்றவியல் நீதிபதி சரவணன் ஆகியோர் மகேந்திரபூபதியிடம் நேற்று முன்தினம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினர். அன்று இரவு மதுரை ஆட்சியர் வீரராகவராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி ஆகியோருடன் மாவட்ட நீதிபதிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர் விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பினர்.
இந்நிலையில், மேலூர் நீதித் துறை நடுவர் மகேந்திரபூபதியை பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் கலையரசன் நேற்று காலை உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை இரண்டாவது விரைவு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா, மேலூர் நீதித்துறை நடுவராக (பொறுப்பு) உடனடியாக நியமனம் செய்யப்பட்டார்.
மதுரை நீதிபதிகள் ஏ.எம்.பஷீர் அகமது, சரவணன் ஆகியோர் நேற்று காலை மேலூர் நீதிமன்றத் துக்கு சென்று மகேந்திரபூபதியிடம், அவரை பணியிடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகலை வழங்கினர். தொடர்ந்து பாரதிராஜா, மேலூர் நீதித்துறை நடுவராக பொறுப்பேற்றார்.
மகேந்திரபூபதி பற்றி..
மேலூர் நீதித்துறை நடுவர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மகேந்திர பூபதி(45) ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். மதுரை சட்டக் கல்லூரியில் பயின்றார். ராமநாதபுரம், கமுதி, மானாமதுரை ஆகிய நீதிமன்றங்களில் வழக்கறி ஞராகப் பணிபுரிந்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வில் வெற்றி பெற்று நீதித்துறை நடுவராகத் தேர்வானார். முதலில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையிலும், பின்னர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியிலும் நீதித்துறை நடுவராகப் பணிபுரிந் தார். 2013-ம் ஆண்டு மே மாதம் மேலூர் நீதித்துறை நடுவராக நியமனம் செய்யப்பட்டார்.