

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் காணொலி காட்சியில் 9-ம் தேதி நடைபெற்றது.
இயந்திரங்கள் ஒதுக்கீடு
தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், தபால் வாக்குச் சீட்டுகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு வாரியாக ஒதுக்கப்பட்டது,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த, அனைத்து வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்கள், கட்டுப்பாட்டுஅறைகளில் போதிய பாதுகாப்புஏற்பாடுகளை செய்ய வேண்டும் என ஆணையர் வெ.பழனிகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
இக்கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணைய செயலர் எ.சுந்தரவல்லி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பேரூராட்சிகளின் ஆணையர் இரா.செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜி.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி
உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடும் தேசிய, மாநில அரசியல் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்களின் வாகனங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் மட்டுமேஅனுமதி வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில தேர்தல்ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் மூன்று சக்கர வாகனங்கள் உட்பட ஒலிபெருக்கிகளுடன் கூடிய வாகனங்களை பயன்படுத்துவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் அனுமதி கடிதத்துடன், மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர்களிடமும் அனுமதி பெற வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்களின் பிரச்சார வாகனங்களுக்கான அனுமதி மாநில தேர்தல் ஆணையத்தால் மட்டுமேவழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் அனுமதி சான்றிதழை நன்கு தெரியும்படி வாகனத்தின்முன்புற கண்ணாடிகள் மீது ஒட்டிவைக்க வேண்டும்.
இந்த வாகனங்களுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.