

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே திருப்பூண்டியில் பாஜக நிர்வாகி காருக்கு நேற்று முன்தினம் இரவு தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியைச் சேர்ந்தவர் புவனேஸ்வர் ராம். பாஜக இளைஞரணி மாவட்ட துணைத் தலைவராக உள்ள இவர், வீட்டுக்கு முன்பு தகரஷீட்டால் அமைக்கப்பட்ட கொட்டகையில் தனது காரை நிறுத்தியிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காருக்கு தீவைக்கப்பட்டதில், காரின் இடதுபக்க கதவு, இடது பக்க டயர் ஆகியவை தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது, அவ்வழியாக வந்த ஒருவர் இதைப்பார்த்து அளித்த தகவலின்பேரில், வீட்டில் இருந்த புவனேஸ்வர் ராம் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி ஆகியோர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து புவனேஸ்வர் ராம் அளித்த புகாரின்பேரில், கீழையூர் போலீஸார் நேற்று அங்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.