

விருதுநகரில் திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திமுக மகளிர் அணி மாநிலச் செயலர் கனிமொழி எம்பி பேசியதாவது:
தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே மக்களை சந்திப்பவர் ஜெயலலிதா. மக்களும், எம்எல்ஏக்களும், அமைச்சர்களும், மத்திய அமைச்சரும்கூட சந்திக்க முடியாத முதல்வர் ஜெயலலிதாவை ஸ்டிக்கரில் மட்டும்தான் அதிகமாகப் பார்க்க முடியும். திமுக ஆட்சியில் பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டமும் கொண்டுவரப்பட்டது. பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக 8-ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை திட்டமும் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, பஸ் கட்டணம், மின் கட்டணம் அனைத்தையும் உயர்த்தினார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
தமிழகத்தில் விவசாயம், தொழில் துறை என அனைத் தும் நலிந்துவிட்டது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். பெண்கள் ஒன்று சேர்ந்து தமிழகத்தில் இனி ஜெயலலிதா அரசு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.