Published : 11 Feb 2022 07:55 AM
Last Updated : 11 Feb 2022 07:55 AM
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் இதுவரை 7 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடந்தன. இதில் பாசிமணிகள், தாயக்கட்டை, அணிகலன்கள், முதுமக்கள் தாழிகள் உட்பட பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றை மக்கள் காணும் வகையில் கொந்தகையில் கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே, கீழடியில் 8-ம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்படும் என கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தது. இப்பணி கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.
அகழாய்வு நடக்க உள்ள இடத்துக்கு பாதை வழங்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அதிகாரிகள் சமரசப்படுத்தினர். இந்நிலையில் கீழடி 8-ம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT