Published : 11 Feb 2022 07:16 AM
Last Updated : 11 Feb 2022 07:16 AM
சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு 2,207 பேரை நியமிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வை நடத்துகிறது.
கணினி வழியிலான இத்தேர்வு பிப்ரவரி 12 முதல் 15-ம் தேதி வரை முதல்கட்டமாகவும், பிப். 16 முதல் 20-ம் தேதி வரை 2-ம் கட்டமாகவும் நடத்தப்படுகிறது.
தேர்வு எழுதுவோருக்கான தேர்வு நாள், தேர்வெழுதும் மாவட்டம், தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு கடந்த 5-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேர்வு மையம் தொலைதூரத்தில் ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காலை 9 மணிக்குத் தொடங்கும் தேர்வுக்கு7.30 மணி முதல் 8.15-க்குள் தேர்வு வளாகத்துக்குள் வந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான தேர்வர்களுக்கு குறைந்தபட்சம் 50 கி.மீ. தொலைவுக்கு அப்பால், வேறொரு மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பதால், தேர்வு நாளன்று காலை 7.30 மணிக்கு தேர்வுமையத்தை சென்றடைவது மிகவும் சிரமம். முந்தைய தினமே சென்றால்தான் காலை 7.30 மணிக்கு பரபரப்பு இல்லாமல் தேர்வு மையத்துக்கு செல்ல முடியும்.
இதுகுறித்து கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது “கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த எனக்கு, சேலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனது தோழி ஒருவர் கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு நாமக்கல் மாவட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, பெரும்பாலான தேர்வர்களுக்கு வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள தேர்வு மையத்தை ஒதுக்கியுள்ளனர்.
புதிய இடத்துக்கு பெண்கள் தனியாக முந்தைய நாளே சென்று தங்கி, தேர்வில் பங்கேற்க வேண்டும். சொந்த ஊரில் மையங்கள் ஒதுக்க இடம் இருக்கும் நிலையில், தேர்வர்களை அலைக்கழிப்பது சரியல்ல. எனவே, அந்தந்த மாவட்டத்துக்குள் மையங்களை ஒதுக்கி, நுழைவுச்சீட்டு வழங்க வேண்டும்'' என்றார்.
மேலும், முகக்கவசம் அணிவது, கரோனா தடுப்பூசி போட்டசான்று வைத்திருப்பது, தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது குறிப்பிட்டிருந்த அடையாள அட்டையின் அசல் எடுத்துச் செல்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தேர்வர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. மேலும், எலெக்ட்ரானிக் சாதனம் கொண்டு செல்லவும், நகைகள், ஹைஹீல்ஸ் செருப்புகள் அணியவும் அனுமதிகிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT