

சென்னை: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக அப்போலோ மருத்துவர்கள், செவிலியர்கள், போயஸ்கார்டன் ஊழியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் உரிய மருத்துவக் குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் 2019-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து, ஆணைத்தின் விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தற்போது ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், ஆணையத்துக்கு உதவ, மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவக் குழு தற்போது எய்ம்ஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் ஒரு கண்காணிப்பாளர், ஒரு உறுப்பினர் செயலர் உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றுள்ளனர். இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மருத்துவர்களுடன் ஆறுமுகசாமி ஆணையம் வரும் 16-ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.