Published : 11 Feb 2022 07:21 AM
Last Updated : 11 Feb 2022 07:21 AM

திருடுபோன சைக்கிளைக் கண்டுபிடித்த போலீஸார் சிறுவனின் வீட்டுக்கே நேரில் சென்று ஒப்படைத்த காவல் துணை ஆணையர்: கீழ்ப்பாக்கத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

சென்னை: கண் முன்னே தனது சைக்கிள் திருடப்பட்டதைக் கண்டு வேதனையடைந்த சிறுவன், கண் கலங்கினார். இதையறிந்த கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் சைக்கிளை மீட்டதுடன், சிறுவனின் வீடு தேடிச் சென்று கொடுத்தார்.

சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புயில் பெற்றோருடன் வசித்து வரும் 11 வயது சிறுவன் கிரிஷ்.

கடந்த 3-ம் தேதி இரவு குடியிருப்பு வளாகத்தில் சிறுவன்விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறுவனின் விலை உயர்ந்த சைக்கிளை, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் திருடிச் சென்றார்.

இதைக் கண்ட சிறுவன் சப்தம்எழுப்பியவாறு, திருடனை விரட்டிச்சென்று பிடிக்க முயன்றார். ஆனால்,திருடன் சைக்கிளுடன் தப்பிச் சென்றார். இதனால் மனமுடைந்த சிறுவன் அங்கேயே கண்கலங்கி அழுதார். பின்னர், நடந்த சம்பவத்தை தனது தந்தையிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக சிறுவனின் தந்தை, ஆன்லைன் மூலம் சென்னை காவல் துறையில் புகார் அளித்தார். தகவலறிந்த கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

அதில், சைக்கிள் திருடப்படுவதும், சிறுவன் விரட்டிச் செல்வதும், பின்னர் சிறுவன் கண் கலங்கியதும் பதிவாகியிருந்தது.

சிறுவனின் வேதனையை உணர்ந்த துணை ஆணையர், சைக்கிள் திருடனை விரைந்து பிடிக்குமாறு தனிப்படை போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, சைக்கிளை திருடிச் சென்ற மாங்காடு அஸ்ரர்(22) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து சிறுவனின் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மீட்கப்பட்ட சைக்கிளை துணை ஆணையர் கார்த்திகேயன், சிறுவனின் வீட்டிற்கே நேரில் சென்றுகொடுத்து, சிறுவனை ஆச்சரியப்படுத்தினார். இதனால் கிரிஷ் மிகவும் மகிழ்ச்சியடைந்து, காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.

சிறுவன் கண்ணெதிரே சைக்கிள்திருடுபோனதால், மனதளவில் சிறுவனுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில் துரிதமாக செயல்பட்டு, சைக்கிளை மீட்டுக் கொடுத்ததாக துணை ஆணையர் கார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x