

மண்டபம் பேரூராட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் தங்க மரைக்காயர் (எ) ஷேக் அப்துல் காதர். இவர் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக மீனவர் அணிச் செயலாளராகவும், மண்டபம் ஒன்றிய அதிமுக செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். 1986, 1996, 2001, 2006, 2011 என தொடர்ச்சியாக 5 முறை மண்டபம் பேரூராட்சித் தலைவராக பதவி வகித்தார். இப்பேரூராட்சியை அதிமுகவின் கோட்டையாக வைத்திருந்தார். இந்நிலையில், 2019-ம் ஆண்டு தங்க மரைக் காயர் தனது 83-வது வயதில் காலமானார்.
இவரது மறைவுக்கு பின்னர் தற்போது நடைபெறும் பேரூராட்சித் தேர்தலில் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
18 வார்டுகளை கொண்ட இந்த பேரூராட்சியில் திமுக, அதிமுக சார்பில் தலைவர் பதவிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே மோதி வருகின்றனர். திமுக சார்பில் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் ராஜா, அக்கட்சியின் மண்டபம் நகரத் தலைவராக உள்ளார். இவரது மனைவி ஜெயந்தியின் சகோதரர் இளையராஜா, அதிமுக சார்பில் தலைவராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக மாவட்ட மருத்துவர் அணி செயலாளரான இளைய ராஜா, 17-வது வார்டில் போட்டியிடுகிறார்.
இதுதவிர திமுக சார்பில் ஜெயந்தி 3-வது வார்டிலும், அவரது மற்றொரு சகோதரர் சம்பத் ராஜா 2-வது வார்டிலும் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் ஜெயந்தியின் சகோதரி சைலஜா 12-வது வார்டில் போட்டியிடுகிறார்.
மாவட்டத்தில் வேறு எந்த பேரூராட்சியிலும் இல்லாத வகையில் மண்டபம் பேரூ ராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் திமுக, அதிமுக சார்பில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.