

மதுவிலக்கு தொடர்பாக தமிழகத்தில் விவாதம் அதிகளவில் நடைபெறும் சூழலிலும் புதுச்சேரியில் அதே அரசியல் கட்சிகள் மவுனம் சாதிக்கின்றன. ஆண்டுதோறும் மதுவிற்பனை புதுச்சேரியில் அதிகரித்தபடியே இருக்கிறது. கணவனை இழந்து உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் விதவைப் பெண்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
மதுவிலக்கு என்ற சொல் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. அதிமுக தரப்பில் ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். அதே நேரத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு தமிழகத்தில் கொண்டு வரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் கட்சிகள் இடையே மதுவிலக்கு முக்கிய விஷயமாக இருக்கையில் புதுச்சேரியில் இதற்கு மாறுபாடான மனநிலையில்தான் கட்சிகள் உள்ளன. பலரும் இவ்விஷயம் பற்றி வாய் திறப்பதில்லை.
அரசியல் நோக்கர்கள், சமூக அமைப்பினர் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரியில் மதுவிலக்கு பற்றி பேச்சை கட்சியினர் மத்தியில் இருந்து எழுவதில்லை. கடந்த 1979ல் மதுவிலக்கு கொண்டு வர முயன்றபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. அது தேர்தலிலும் எதிரொலித்தது. அதன்பிறகு மதுவிலக்கு பற்றி பேசுவதில்லை. சுற்றுலா நகரமான புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டவர் தொடங்கி பல நாட்டவர்களும் வருகின்றனர். அனைத்து நாட்களிலும் பெரும்பாலான பார்களும் நிரம்பிதான் வழிகின்றன. வெளிமாநிலத்தவர், திரைப்படங்கள் என பலரும் புதுச்சேரியை மதுவின் அடையாளமாக தவறாகவே நினைக்கின்றனர். தேர்தலில் மதுவிலக்கு பற்றி இங்கு குறிப்பிடாததற்கு முக்கியக்காரணம், புதுச்சேரியில் பல கட்சியினர், முக்கிய பொறுப்பாளர்கள் என பலரும் சாராயக்கடை, மதுக்கடை, பார்கள் நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் இருக்கும் எக்கட்சியும் மதுவிலக்கு பற்றி பேச மாட்டார்கள்" என்று குறிப்பிட்டனர்.
மதுவிலக்கு தொடர்பாக புதுச்சேரியில் அனைத்து கட்சிகளும் மவுனத்தில்தான் உள்ளன. புதுச்சேரியிலுள்ள முக்கியக்கட்சிகளின் நிர்வாகிகளிடம் மதுவிலக்கு தொடர்பாக கருத்து கேட்டால் பெயர் குறிப்பிடாமல் கருத்து வெளியிட கோருகின்றனர். "மதுவிலக்கு தமிழகத்தின் நிலை வேறு, புதுச்சேரியின் நிலை வேறு. மாநிலங்களின் நிலையை, சூழலைபார்த்துதான் இதை பேச முடியும். ஒட்டுமொத்தமாக மதுவிலக்கு என பொதுவாக பேசக்கூடாது. மதுவிற்பனை நேரத்தை குறைப்பது, கடைகளின் எண்ணிக்கையை அதிகமாக்காமல் படிப்படியாக குறைக்கலாம்." என்று குறிப்பிடுகின்றனர். புதுச்சேரியில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்ற கருத்தையே கட்சி நிர்வாகிகள் தரப்பில் குறிப்பிடுகின்றனர்.
அதேநேரத்தில் அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் அரசு உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எம்எல்ஏக்கள் தரப்பில் தரும் பட்டியல் மூலமே இதை உணரலாம்" என்றுகுறிப்பிடுகின்றனர்.
கலால்துறை தரப்பில் விசாரித்தபோது, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மதுபானக்கடைகள் 452 உள்ளன. அதுமட்டுமில்லாமல் நூற்றுக்கணக்கான சாராயக்கடைகள் உள்ளன. மதுபான விற்பனை ஆண்டுதோறும் அதிகரித்துதான் வருகிறது. கடந்த 2010-11ம் ஆண்டில் ரூ. 401 கோடி இலக்கு வைத்து ரூ. 378.65 கோடி வசூலானது. அதைத்தொடர்ந்து 2011-12ல் ரூ. 450 கோடி இலக்கு வைத்து ரூ. 447.36 கோடியும், 2012-13ல் ரூ. 500கோடி இலவக்கு வைத்து ரூ. 503.08 கோடியும், 2013-14ல் ரூ. 510 கோடி இலக்கு வைத்து ரூ. 511.71 கோடியும், 2014-15ல் ரூ. 540 கோடி இலக்கு வைத்து ரூ. 544.52 கோடியும் வசூலானது. நடப்பாண்டான 2015-16ல் ரூ. 630 கோடி இலக்கு வைத்து ரூ. 671 கோடி வசூலானது" என்று குறிப்பிடுகின்றனர்.