Published : 10 Feb 2022 05:59 PM
Last Updated : 10 Feb 2022 05:59 PM

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாவிட்டால் ஆளுநரை திட்டுவோம்: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: "நீட் தேர்வில் விலக்குக் கோரிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாவிட்டால் ஆளுநரை ஆண்டு முழுவதும் திட்டிக்கொண்டே இருப்போம்" என வேலூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று (பிப்.10) நடைபெற்றது. கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: "திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 9 மாதங்களாகிறது. 8 மாதங்கள் கரோனாவை கட்டுப்படுத்துவதிலும் மக்கள் உயிரை காப்பதிலும் சென்றுவிட்டது.

முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி ஸ்டாலினிடம் கற்றுக்கொள்ளுங்கள். ஊழல் எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கற்றுக் கொள்ளுங்கள்.

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் 234 உறுப்பினர்களை துச்சமாக நினைத்து முகத்தில் அடிப்பது போல் அதை ஆளுநர் திருப்பி அனுப்பி விட்டார். இது எந்த ஆளுநரும் செய்யாதது. அதை அவர் செய்துவிட்டார். ஆனால், அதே வேகத்தில் சுவற்றில் அடித்த பந்து போல தற்போது மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி உள்ளோம்.

இப்போது, ஆளுநர் அதை திருப்பி அனுப்ப முடியாது. ஒன்று அவரே வைத்துக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும். அவர் மசோதாவை அனுப்பிவிட்டால் விட்டு விடுவோம். இல்லாவிட்டால் ஆண்டு முழுவதும் திட்டிக்கொண்டே இருப்போம்.

மக்களுக்கு அனைத்து வளர்ச்சிப் பணிகள் அடிப்படை வசதிகளை கொண்டு செல்வது உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் கையில்தான் உள்ளது. கட்சி எனக்கு என்ன செய்தது என கேட்பவன், கட்சிக்கு ஏற்பட்ட தொற்று நோய். கட்சிக்காக நான் என்ன செய்தேன் என்பவன்தான் திமுகவின் ரத்த நாமம் என தலைவர் கருணாநிதி கூறுவார். அவரது வழியில் செயல்பட்டு வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும்" என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x