கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து உதகையில் சுயேச்சை வேட்பாளர் தீக்குளிக்க முயற்சி

கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து உதகையில் சுயேச்சை வேட்பாளர் தீக்குளிக்க முயற்சி

Published on

உதகை: கடை ஒதுக்கீடு விவகாரத்தில் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சுயேச்சை வேட்பாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கிளப் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது யாகூப் (40). இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை கோத்தகிரி பேருந்து நிலையப் பகுதியில் தள்ளுவண்டி கடை மூலம் பாஃஸ்ட்புட் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் கோத்தகிரி பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி உட்பட அனைத்து வரிகளையும் செலுத்தியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு சாலை விரிவாக்கம் மேற்கொள்வதற்காக அவரது கடை அங்கிருந்து அகற்றப்பட்டது. அந்தசமயத்தில் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் காந்தி மைதானம் அருகே கடை வைத்துக்கொள்ள அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், அந்தப் பகுதியில் யாகூப்புக்கு வழங்கப்பட்ட இடத்தில் வெளியூரைச் சேர்ந்த வேறு நபருக்கு கடை வைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியதாக தெரிகிறது. இதனைக் கண்டித்து நேற்று முன்தினம் கோத்தகிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்காக சரக்கு வாகனத்தில் உதகை வந்தார்.

ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்தபோது திடீரென சரக்கு வாகனத்தில் இருந்த டீசலை எடுத்து மேலே ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் துரிதமாக செயல்பட்டு அவரிடமிருந்து டீசல் கேனை பிடிங்கி, வாகனத்திலிருந்து அவரை இறக்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அவரை உதகை ஜி1., காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டனை கண்டித்தும், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டுமெனவும் கோஷம் எழுப்பினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயன்ற முகமது யாகூப் கோத்தகிரி பேரூராட்சி 11-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in