

புதுச்சேரி: புதுச்சேரியில் மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர தடை விதித்ததாக தெரிவிக்கப்பட்ட புகார் தொடர்பாக, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநருக்கு கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் ஹிஜாப் அணிந்த மாணவி பள்ளிக்கு வரத் தடை விதித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரித்தனர். இது குறித்து தகவலறிந்த சமூக அமைப்புகள், பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், எந்த உள்நோக்கத்தோடும் கூறவில்லை என்றும், மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரி சீருடை அணிய அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து சமூக அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், முதல்வர் ரங்கசாமி, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தனர். இது குறித்து துறைரீதியில் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமியிடம், விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.
அமைச்சரின் உத்தரவை ஏற்று சம்பந்தப்பட்ட பள்ளியில் இணை இயக்குநர் சிவகாமி விசாரணையை தொடங்கியுள்ளார். இதனிடையே "கல்வித்துறை இணை இயக்குநர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பின்னர், உண்மை நிலையை அறிந்து கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும்" என அமைச்சர் நமச்சிவாயம் உறுதி அளித்தார்.