

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலையில் மர்ம இருப்பதாகவும், அவரது செல்போனை ஆய்வு செய்ய வலியுறுத்தியும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் 36-வது வார்டு அதிமுக வட்டச் செயலராக இருப்பவர் ஜானகிராமன். இவர் அதே பகுதியில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிடுகிறார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ஜானகிராமன் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இது தற்கொலை என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் வரை தீவிர பிரச்சாரத்தில் இருந்து வந்த ஜானகிராமன் அதிகாலை திடீரென்று தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்துக்கு வந்த அதிமுக மாவட்டச் செயலர் சோமசுந்தரம், மாநில அமைப்புச் செயலர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் தலைமையில் வந்த அதிமுகவினர், வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலையில் மர்மம் இருப்பதாகவும், ஜானகிராமனின் செல்போனை ஆய்வு செய்து மிரட்டல் விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
போராட்டம் குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் கூறுகையில், "ஜானகிராமன் தேர்தலில் போட்டியிடுவதால் அவரை குடும்பத்துடன் கொலை செய்துவிடுவதாக சிலர் மிரட்டியுள்ளனர். இது குறித்து அவர் தனது நண்பர்கள் சிலரிடம் கூறியுள்ளார். உடனடியாக அவரது தொலைபேசியை கைப்பற்றி யார் பேசியுள்ளனர் என்பதை ஆய்வு செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துவதாக போலீஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர்" என்றார்.
இதனிடையே, வேட்பாளர் ஜானகிராமன் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.
அன்புச் சகோதரர் ஜானகிராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.