

மதுரை: தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை ட்விட்டரில் பதிவிட்டதாக இவரை மதுரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
பின்னர், கரோனா பரவலுக்கு குறிப்பிட்ட மதத்தினர் தான் காரணம் என சித்தரித்து சமூகவலை தளங்களில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் போலீஸார் பதிவு செய்த வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். இவ்விரு வழக்குகளையும் ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கையும் ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், வீடுகளில் சிஏஏ எதிர்ப்பு கோலம் போட்டது தொடர்பான வீடியோ திமுகவை களப்படுத்தியதாக கூறி திமுக மாணவரணியைச் சேர்ந்த உமாசங்கர் என்பவர் எனக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மாரிதாஸ் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் மாரிதாஸூக்கு எதிரான தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் ரத்து செய்து நீதிபதி இன்று உத்தரவிட்டார்.