கெயில் மறுசீராய்வு மனு தள்ளுபடி: விவசாயிகள் நலன் காக்க புதிய அரசியல் சட்டம் இயற்ற கோரிக்கை

கெயில் மறுசீராய்வு மனு தள்ளுபடி: விவசாயிகள் நலன் காக்க புதிய அரசியல் சட்டம் இயற்ற கோரிக்கை
Updated on
1 min read

கெயில் திட்டத்தை எதிர்த்த விவசாயிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய அரசியல் சட்டத்தைக் கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை எரிவாயு எடுத்துச் செல்லும் திட்டத்தை மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்துக்காக தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விவசாய நிலங்களின் வழியாக குழாய்களை பதிக்கும் பணிகளை மேற்கொண்டது. விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், தமிழக அரசு கெயில் திட்டப் பணிகளுக்கு தடை விதித்திருந்தது. ஆனால், அதைத் தொடர்ந்து தமிழக அரசு விதித்த தடை மீதான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எரிவாயு குழாய் பதிப்பு பணிக்கு அனுமதி அளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, விவசாயிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் சமீபத்தில் தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. குழாய் பதிப்பு திட்டத்துக்கு அனுமதி வழங்கிய தீர்ப்பை, மறுஆய்வு செய்ய முகாந்திரம் இல்லையெனக் கூறி விவசாயிகளின் மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் தமிழகத்தில் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து கோவையில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளை பாதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் புதிய அரசியல் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். கெயில் விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கின்றனர். எனவே, மத்திய அரசும் விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

1962-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிஎம்பி என்ற பெட்ரோலியம் மினரல் பைப்லைன் சட்டத்தின் அடிப்படையில் விவசாயிகளின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே பிஎம்பி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், பிஎம்பி சட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதோடு, பல்வேறு கட்ட போராட்டங்களையும் விவசாயிகள் முன்னெடுப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in