நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
Updated on
2 min read

சென்னை: `இந்து தமிழ் திசை' கட்டுரை எதிரொலியாக, நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: `இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று (பிப். 9) ‘காவிரி நெல்லுக்குக் கொள்முதல் தேவை; வல்முதல் எதற்கு? என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது. ‘நெல் கொள்முதலில் சிப்பத்துக்கு முப்பது ரூபாய் கொடுத்துக் காவிரி நெல்லைச் செல்லுபடியாக்க வேண்டும். முப்பது என்பது இடம், காலம் பொறுத்துக் கூடுமே தவிர குறையாது’ என எழுதியிருந்ததை முதல்வர் மு.க.ஸ்டாலின் படித்து, என்னை செல்போனில் உடனே அழைத்து, தவறுசெய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், இதுகுறித்து கட்டுரை ஆசிரியரிடமும் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

நெல் கொள்முதல் நிலைய சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டைக்கு கொடுக்கப்பட்டு வந்த ரூ.3.25 என்ற ஊதியத்தை ரூ.10-ஆக உயர்த்தியதுடன், பருவகாலப் பட்டியல் எழுத்தர்களுக்குத் தினப்படியாக ரூ.120 மற்றும் பருவகால உதவுபவர்களுக்கும், காவலர்களுக்கும் தினப்படியாக ரூ.100-ம் கூடுதலாக வழங்க உத்தரவிட்டார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்ததைப்போல, நெல் விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு ரூ.40 பெற்றதை நிறுத்துவதுடன், இந்த ஆட்சியில் விவசாயிகளிடமிருந்து ஒரு பைசாகூட பெறக்கூடாது என்ற நோக்கில், ஆண்டுக்கு அரசுக்கு ரூ.83 கோடி கூடுதல் செலவானாலும், நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது என்று கூறி, அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசி, நெல்கொள்முதல் நிலையங்களில் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு எனக்கு அறிவுறுத்தினார். அவ்வாறே செய்ததுடன், ஆய்வுக் கூட்டங்களிலும் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும், மூட்டைக்கு ரூ.30 பெறப்படுகிறது என்ற புகார் வருவது வேதனையாக உள்ளது. இனி யாராவது இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநரிடம், தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதுடன், அனைத்து மண்டல அலுவலகங்கள், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு கூறியுள்ளேன். விவசாயிகள் தங்கள் நெல்லுக்கு ஒரு பைசாகூட கொடுக்க தேவையில்லை.

கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளாக நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்த்தப்படவில்லை. ஆனால், சன்னரக நெல் குவிண்டாலுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.30 உயர்த்தி ரூ.100-ஆகவும், பொது ரகத்துக்கு ரூ.25 உயர்த்தி ரூ.75-ஆகவும் கடந்த ஆண்டு அக். 1-ம் தேதி முதல் விவசாயிகளுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

கடந்த ஆட்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டைக்கு ரூ.55 பைசா மட்டுமே உயர்த்தப்பட்ட நிலையில், முதல்வர் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் மூட்டை ஒன்றுக்கு ரூ.6.75 உயர்த்தி வழங்கியுள்ளார். எனவே, திமுக அரசின் நோக்கத்தைப் புரிந்து, அனைவரும் செயலாற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரி வித்துள்ளார்.

ஆச்சரியம் ஏற்படுத்திய முதல்வர்: தங்க.ஜெயராமன்

`இந்து தமிழ் திசை'யில் கட்டுரை வெளியான நிலையில் நேற்று காலை இந்தக் கட்டுரையை அளித்த தங்க.ஜெயராமனை முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார். அதுகுறித்து தங்க. ஜெயராமன் கூறியதாவது: காலையில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதன்பின் முதல்வரே அழைத்து, "நான் ஸ்டாலின் பேசுகிறேன். உங்கள் கட்டுரையைப் படித்தேன். நடவடிக்கை எடுக்க கூறியுள்ளேன்" என்றார். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. முதல்வரின் நடவடிக்கை விவசாயிகளுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும்.

ஜனநாயக அரசில் மக்கள் குறைகளை உன்னிப்பாக கவனித்து, உரிய பதில் அளித்தல், பத்திரிகையில் வந்ததைப் படித்து நடவடிக்கை எடுக்க கூறியது ஆகியவை பெரிய விஷயம். முதல்வர் அழைத்துப் பேசியதும், மக்கள்குறைகளுக்கு உடனே செவிசாய்த்து, நடவடிக்கை எடுத்தது எனக்கு சந்தோஷத்தையும், திருப்தியையும் அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in