Published : 10 Feb 2022 08:05 PM
Last Updated : 10 Feb 2022 08:05 PM
மதுரை: உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 2-வது மேல்முறையீடு மனுக்களை 58 நாட்களில் விசாரித்து முடிக்க தயாராக இருக்குமாறு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி கடிதம் அனுப்பியுள்ளார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். இவர்கடந்த 3 மாதங்களாக வழக்குகளை ரத்து செய்யக் கோருவது மற்றும்விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றம் செய்யக் கோரும் குற்றவியல் மனுக்களை விசாரித்து வந்தார். அப்போது பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு மாற்றப்படுவது வழக்கம். அதன்படி பிப்.7 முதல்அடுத்த 3 மாதங்களுக்கு நீதிபதிஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு 2-வதுமேல்முறையீடு மனுக்களை விசாரிக்கும் பணி வழங்கப்பட்டுஉள்ளது.
இந்நிலையில், ‘நிலுவையில் உள்ள 2-வது மேல்முறையீடு மனுக்களை விசாரித்து முடிக்கதயாராக இருங்கள், ஒத்துழைப்புதாருங்கள்’ என வழக்கறிஞர்களுக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடிதம் அனுப்பியுள்ளார்.
வழக்கறிஞர்களுக்கு அனுப்பியகடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: பிப்.7 முதல் ஏப்.30 வரை 58 வேலைநாட்கள் உள்ளன. எனக்கு 2010 முதல் 2014 வரையிலான 2-வது மேல்முறையீடு மனுக்களை விசாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 2010-ல் 445 இரண்டாவது மேல்முறையீடு மனுக்கள் நிலுவையில் இருப்பதாக பதிவுத்துறை தெரிவித்துஉள்ளது. நான் வழக்கறிஞர்கள் ஒத்துழைப்புடன் அவற்றை முழுமையாக விசாரித்து முடிக்க முடிவு செய்துள்ளேன்.
எனவே, வழக்கறிஞர்கள் அனைவரும் 14.2.2022 முதல் தயாராகஇருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வழக்குகளின் விசாரணையை தள்ளி வைப்பது, சிறிது நேரம் நிறுத்தி வைப்பது போன்று எதையும் அனுமதிக்கப் போவதில்லை. வழக்கை விசாரணைக்கு எடுக்கும்போது வழக்கறிஞர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கால அவகாசம் குறைவாகவே உள்ளது. வழக்கறிஞர்கள் ஆதரவு அளித்தால் 445 நிலுவை வழக்குகளையும் முடிக்க நான் தயாராக உள்ளேன். தீர்ப்பு கூறிய 7 நாட்களுக்குள் தீர்ப்பு நகல் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
எனவே வழக்கறிஞர்களே 2010-ம் ஆண்டின் மேல்முறையீடு மனுக்களை பரிசீலிக்க தொடங்குங்கள். வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பை வேண்டுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
விசாரணையை தள்ளி வைப்பது, சிறிது நேரம் நிறுத்தி வைப்பதுபோன்று எதையும் அனுமதிக்கப் போவதில்லை. வழக்கறிஞர்கள் ஆதரவு அளித்தால் 445 நிலுவை வழக்குகளையும் முடிக்க நான் தயாராக உள்ளேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT