Published : 10 Feb 2022 07:55 AM
Last Updated : 10 Feb 2022 07:55 AM
செங்கல்பட்டு/திருவள்ளூர்: திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று ஆவேசமாக தெரிவித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, இதை நல்ல முறையில் பயன்படுத்துவது அதிமுகவினர் ஒவ்வொருவரின் கடமை என்று கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாம்பரம் மாநகராட்சி, ஆவடிமாநகராட்சி, பூந்தமல்லி, திருவேற்காடு, திருநின்றவூர் ஆகிய நகராட்சிகள், திருமழிசை பேரூராட்சி, பெருநகர சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர், வளசரவாக்கம் மண்டலங்களில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன்கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று தாம்பரம் அருகே சேலையூர், திருவேற்காடு அருகே வானகரம் ஆகிய இடங்களில் நடைபெற்றன.
இக்கூட்டங்களில், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி அறிமுகம் செய்துவைத்துப் பேசியதாவது:
காணொலிக் காட்சி வாயிலாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகக் கூறியுள்ளார். ஒரு சில வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு 70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, அவர் பொய் சொல்லி வருகிறார்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வருகிறார். இந்த 9 மாத கால ஆட்சியில் திமுகவுக்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியை அகற்ற மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதை நல்ல முறையில் பயன்படுத்துவது அதிமுகவினர் ஒவ்வொருவரின் கடமை.
சாதாரணமானது அல்ல
உள்ளாட்சித் தேர்தல் என்பது சாதாரணமானது அல்ல. இதில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். எனவே, வீடு வீடாகச் சென்று எறும்புகள், தேனீக்கள் போன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். இந்த 9 மாத கால திமுக ஆட்சியின் அவலத்தை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளைச் சேகரிக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பல்லாவரத்தில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ரூ.25 கோடி மதிப்பில் சிட்லபாக்கம் ஏரியைத் தூர்வாரி பூங்காஅமைக்கும் பணி நடந்து வருகிறது. திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல், ஆவடி பருத்திப்பட்டு பசுமைப் பூங்கா, அண்ணனூர் ரயில்வே மேம்பாலம், அயப்பாக்கம், ஆவடி அம்மா திருமண மண்டபங்கள், திருநின்றவூரில் புதிய காவல் நிலையம், ஆவடி, மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இப்படி அதிமுக அரசு செய்த சாதனைகளையும், திமுக அரசு செய்யாததையும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்து, அதிமுகவின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும்.
தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராகவும், அதிமுக அரசால் அறிவிக்கப்பட்ட ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராகவும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வர, அதிமுகவினர் உழைக்க வேண்டும். ஆவடி மாநகராட்சி மட்டுமல்லாமல், மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் வெற்றி பெற்று, திருவள்ளூர் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என, நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விரு கூட்டங்களில், முன்னாள் அமைச்சர்களான வளர்மதி, கோகுல இந்திரா, டி.கே.எம்.சின்னையா, பெஞ்சமின், பி.வி.ரமணா, அப்துல் ரஹீம் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களான தன்சிங், ஜெ.சி.டி.பிரபாகர், அலெக்சாண்டர், பலராமன், கே.எஸ்.விஜயகுமார், மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT