கோயம்பேடு மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயம் விலை உயர்வு: கிலோ ரூ.32-க்கு விற்பனை

கோயம்பேடு மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயம் விலை உயர்வு: கிலோ ரூ.32-க்கு விற்பனை
Updated on
1 min read

சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயத்தின் விலை ரூ.32 ஆக உயர்ந்துள்ளது. வரத்து குறைவு காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் சாம்பார் வெங்காய உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சாம்பார் வெங்காயத்தின் மொத்த உற்பத்தியில் 90 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சாம்பார் வெங்காயம் அதிகம் பயிரிடப்படுகிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாக சாம்பார் வெங்காயத் தின் விலை கிலோ ரூ.20-க்கும் குறைவாக இருந்தது. தற்போது வரத்து குறைவால் அதன் விலை ரூ.32 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை மார்க்கெட்களில் ரூ.35 முதல் ரூ.50 வரை சாம்பார் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. கூட்டுறவுத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் பண்ணை பசுமைக் கடைகளில் கடந்த 10 நாட்களாக சாம்பார் வெங்காய விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜனிடம் கேட்டபோது, “கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 15 லோடுகள் வரை சாம்பார் வெங்காயம் வந்துக்கொண்டிருந்தது. தற்போது அது 8 லோடுகளாக குறைந்துள்ளது. வரத்து குறைவால் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது” என்றார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக காய்கறி பயிர்கள் துறை பேராசிரியர் ஆறுமுகத்திடம் கேட்டபோது, “கடந்த ஜனவரி மாதம் அறுவடை செய்து, இருப்பு வைத்திருந்த சாம்பார் வெங்காயத்தை மார்ச் மாதம் வரை விவசாயிகள் சந்தைக்கு அனுப்புவார்கள். தற்போது இருப்பு குறைந்து, வரத்தும் குறைந்திருக்கும். அடுத்ததாக வரும் மே மாதத்தில் அறுவடை நடைபெறும். அப்போது கிடைக்கும் சாம்பார் வெங்காயத்தை 6 மாதங்கள் வரை இருப்பில் வைத்திருக்க முடியும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in