Published : 10 Feb 2022 06:58 AM
Last Updated : 10 Feb 2022 06:58 AM
சென்னை: சென்னை - விளாடிவோஸ்க் (ரஷ்யா) நகரங்களுக்கான கடல்வழி வர்த்தக போக்குவரத்து திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்று ரஷ்ய துணைத்தூதர் ஒலெக் என் அவ்தீவ் கூறினார்.
இந்தியா, ரஷ்யா இடையிலான உறவை வலுப்படுத்த கலாச்சாரம், வர்த்தகம், அறிவியல் உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதன்தொடர்ச்சியாக இந்திய - ரஷ்ய தொழில் வர்த்தக சபை மற்றும் ரஷ்ய பிரிமோர்ஸ்கி மண்டல தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் இரு நாடுகளுக்கு இடையே புதிய தொழில் வாய்ப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இணையவழியில் நேற்று கையெழுத்தாகின.
இந்த ஒப்பந்தத்தில் இந்திய - ரஷ்ய தொழில் வர்த்தக சபை நிறுவனர் வி.எம்.லட்சுமி நாராயணன், பிரிமோர்ஸ்கி மண்டல தொழில் வர்த்தக கூட்டமைப்பு தலைவர் போரிஸ் ஸ்டுப்நட்ஸ்கி ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத்தூதர் ஒலெக் என் அவ்தீவ் பேசியதாவது: இந்தியா, ரஷ்யா நாடுகள் இணைந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றன.
தற்போதைய முன்னெடுப்புகள் இருநாடுகளின் இடையேயான உறவை பலப்படுத்த முக்கிய நகர்வாக அமையும். இதில் சென்னை - விளாடிவோஸ்க் (ரஷ்யா) நகரங்களுக்கான கடல்வழி வர்த்தக போக்குவரத்து திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் இருநாடுகளின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரிமோர்ஸ்கி தொழில் வர்த்தக கூட்டமைப்பு தலைவர் போரிஸ் ஸ்டுப்நட்ஸ்கி பேசும்போது, “தற்போது கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் வணிகரீதியான வளர்ச்சிக்கு பெரிதும் சாதகமான சூழலை ஏற்படுத்தும். இதன்மூலம் தென்னிந்தியாவுக்கும், கிழக்கு ரஷ்ய மாகாணங்களுக்கும் இடையேயான ஏற்றுமதி, இறக்குமதி மிகவும் அதிகரிக்கும்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ரஷ்ய அறிவியல் கலாச்சார மைய இயக்குநர் கென்னடி ஏ.ரகலேவ், இந்திய ரஷ்ய தொழில் வர்த்தக சபைத் தலைவர் ஆர்.வீரமணி, பொதுச்செயலாளர் பி.தங்கப்பன், பொருளாளர் ஜெயந்தி மனோஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT