

சென்னை: நாட்டின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாஜக செயற்குழு உறுப்பினரான சவுதாமணி, இனக்கலவரத்தைத் தூண்டும் வகையில் ஒரு நபர் பேசும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது கருத்துகளையும் தெரிவித்து இருந்தார். அவரது நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
தனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படக் கூடும் என்பதால் தனக்கு முன்ஜாமீன் அளிக்கக் கோரி சவுதாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆர். பொங்கியப்பன் முன்பாக நடந்தது.
அப்போது போலீஸார் தரப்பில், சவுதாமணி மீது மதக் கலவரத்தை தூண்டும் நோக்கிலும், பொது அமைதிக்கு எதிராக கலகம் செய்யும் நோக்கிலும் செயல்பட்டுள்ளதாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆர். பொங்கியப்பன், போலீஸார் மனுதாரருக்கு எதிராக வழக்குபதிவு செய்துள்ளதால் அந்த வழக்கை எதிர்த்தும், முன்ஜாமீன் கோரியும் புதிதாக மனு தாக்கல் செய்யலாம். புகாரின் அடிப்படையில் மனுதாரர் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரியிருப்பதால் அதை ஏற்க இயலாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.