

சென்னை: ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் ஷ்ரவண்குமார் (வயது 27). 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சர்க்கரை நோய்க்கும் உரிய சிகிச்சை பெறாமல் இருந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது முகத்தின் இடது பக்கத்தில் கருப்பு பூஞ்சை நோய் முற்றிய நிலையில் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
அறுவை சிகிச்சை செய்தால் முகத்தின் இடது பக்கத்தில் பெரிய பாகத்தை இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டு அவரது ஒப்புதலோடு முகம், கழுத்து மற்றும் முகச்சீரமைப்புத் துறை தலைவர் மருத்துவர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். நான்கு வாரங்களுக்குப்பின் பரிசோதனை செய்து பார்த்ததில், மீதம் இருந்த கருப்பு பூஞ்சை முகத்தின் இடது பக்க கண் உட்பட பல பகுதிகளில் பரவியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மீண்டும் அறுவை சிகிச்சை செய்து முகத்தின் இடது பக்கத்தின் கண், மூக்கு, மேல் தாடை உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டன. முகத்தின் ஒரு பக்கத்தை முழுவதுமாக இழந்ததால் அவர் பேச முடியாமலும், உணவு சாப்பிட முடியாமலும் அவதிப்பட்டார்.
அவரது முகத்தின் இடது பக்கத்தை செயற்கையாக உருவாக்க முடியும் என்பதை மருத்துவர் செல்வகுமார் கூறிய ஆலோசனையின்படி, அவரது தலைமையில் பல துறைகளை சேர்ந்த மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. மருத்துவக் குழுவினர் ஆலோசனை நடத்தி அவரது முகத்தை மறுசீரமைக்க முடிவு செய்தனர்.
அதன்படி, முகச்சீரமைப்புக்காக நவீன தொழில்நுட்பத்தை கொண்டு அவரது முகத்துக்கு ஏற்ப செயற்கை பாகம் உருவாக்கி பொருத்தப்பட்டது. பின்னர், அவர் சாப்பிடவும், பேசவும் தலையில் இருந்து திசுக்களை எடுத்து தாடையும் தாடை எலும்பும் சரி செய்யப்பட்டது. இதுபோல் மொத்தம் 8 அறுவை சிகிச்சைகள் அக்டோபர் முதல் கடந்த ஜனவரி வரை செய்யப்பட்டுள்ளன. சிகிச்சைக்குப்பின், அவரது முகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அவர் நலமுடன் உள்ளார்.