

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே ரோந்து பணியில் இருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலர் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணன்(23). குன்றத்தூர் காவல் நிலையத்தில் குற்றப் பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலை, சிறுகளத்தூர் அருகே ரோந்துப் பணியில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதனை கண்டதும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த குன்றத்தூர் போலீஸார், நாராயணனை பரிசோதனை செய்தபோது அவர்இறந்து போனது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.