

கிரானைட் முறைகேடு தொடர்பான சகாயம் குழுவின் அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜி.ராமகிருஷ்ணன் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''தமிழகத்தில் சுதந்திரம் அடைந்த பிறகு தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய ஊழல் முறைகேடு என்றால் அது கிரானைட் முறைகேடு தான். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் நடந்த இந்த முறைகேட்டை மூடி மறைக்க திமுக, அதிமுக தீவிரம் காட்டி வருகின்றன. இந்த முறைகேட்டால் அரசுக்கு ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 145 கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் கிரானைட் பிளாக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றை சர்வதேச டெண்டருக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் கிரானைட் குவாரிகளுக்கு விவசாய நிலங்களை இழந்தவர்களுக்கு அந்த இடத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் பி.ஆ.பி நிறுவனத்தினர் 2 ஆயிரத்து 807 ஆவணங்களின் மூலம் 3 ஆயிரத்து 865.382 ஏக்கர் நிலப்பரப்பை வாங்கி பதிவுசெய்துள்ளனர். தமிழகம் முழுவதும் வாங்கப்பட்டுள்ள நிலத்தின் அளவு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஏக்கர் இருக்கலாம். இது நில உச்சவரம்புச் சட்டத்தை வெளிப்படையாக மீறியுள்ள செயலாகும்.
எனவே, 20 ஆண்டுக்கும் மேலாக நடைபெற்ற கிரானைட் முறைகேடுளை விசாரிக்க பல்துறை நிபுணத்துவம் வாய்ந்த சிபிஐ சிறப்புப் புலனாய்வுக் குழுவை உயர் நீதிமன்றமே ஏற்படுத்தி, அதன் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடக்க வேண்டும். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் போல – டாமின் நிறுவனமே கிரானைட் வர்த்தகத்தில் ஈடுபட வகை செய்ய வேண்டும்.
கிரானைட் கனிமவளச் சுரண்டலில் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல்வாதிகள், கிரானைட் முதலாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், அவர்களின் முறைகேடான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். கிரானைட் கொள்ளை தொடர்பான சகாயம் விசாரணை அறிக்கை மற்றும் ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வழங்கப்பட வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.