வினோஜ் பி.செல்வம் மீதான வழக்கின் ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

வினோஜ் பி.செல்வம் மீதான வழக்கின் ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: இரு பிரிவினரிடையே வெறுப்புணர்வை தூண்டியதாக தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக தமிழக பாஜக இளைஞர் அணி தலைவரான வினோஜ் பி.செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவு உண்மைக்கு மாறான தகவலுடனும், வதந்தியை பரப்பி, இரு பிரிவினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையை உருவாக்கி, பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார், வினோஜ் பி.செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி வினோஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், செய்தித்தாளில் வந்ததை ட்விட்டரில் பதிவிட்டதாகவும், கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பாஜகவிற்கு பரப்புரை செய்யும் வகையிலேயே பதிவிட்டதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டும், வினோஜை கைது செய்யக்கூடாது என அறிவுறித்தி இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பத்திரிகையில் வந்த செய்தியையே பகிர்ந்ததாக வினோஜ் தரப்பில் வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில் கோயில்கள் மட்டும் இடிக்கப்படுவதாக கூறி, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்துள்ளதாகவும், அரசியலுக்காக மதத்தை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களையும், ட்விட்டர் பதிவுகளையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in