

திருச்சி: சமூக வலைதளங்களில் விதிகளுக்குட்பட்டு பிரச்சாரம் செய்யலாம். அதேவேளையில், விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தொடர்புடைய உதவித் தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி இன்று தொடங்கியது. முன்னதாக, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் சிவராசு கூறியது: ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் இருந்து தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி குலுக்கல் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். திருச்சி மாவட்டத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,262 வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் விவரங்கள், அந்தந்த வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு சிடி வடிவில் அளிக்கப்படும். ஒதுக்கீடு செய்யப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மாற்றப்படாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி, வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்படும்.
திருச்சி மாவட்டத்தில் அஞ்சல் வாக்களிக்க தகுதியுள்ள 5,200 பேரில், நகர்ப்புறங்களில் உள்ள 3,450 பேருக்கு அஞ்சல் வாக்குச்சீட்டுப் படிவம் அளிக்கப்பட்டதில், இதுவரை 2,600 அஞ்சல் வாக்குச்சீட்டுப் படிவங்கள் வந்துள்ளன. திருச்சி மாவட்டத்தில் வாக்கு இருந்து, வெளிமாவட்டத்தில் பணியில் உள்ளவர்களிடம் இருந்தும் அஞ்சல் வாக்குச்சீட்டு வர வாய்ப்புள்ளது.
சமூக வலைதளங்களில் விதிகளுக்குட்பட்டு பிரச்சாரம் செய்யலாம். அதேவேளையில், விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சுவர் விளம்பரங்கள் செய்ய யாருக்கும் அனுமதி கிடையாது. எங்கேனும் சுவர் விளம்பங்கள் இருந்து தகவல் கிடைத்தால் உடனடியாக அழிக்கப்பட்டு தொடர்புடைய வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்றார்.