

திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகரி நேற்று சந்தித்துப் பேசினார்.
மனைவி காந்தியுடன் நேற்று பகல் 12 மணியளவில் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த அவர், தந்தை கருணாநிதி, தாயார் தயாளு அம்மாள் ஆகியோரை சந்தித்துப் பேசினார். சுமார் 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.
இது தொடர்பாக அழகிரியிடம் தொலைபேசியில் கேட்டபோது, ‘‘சித்திரைத் திருநாளில் தாய், தந்தையரிடம் வாழ்த்து பெறுவதற்காக சந்தித்தேன். தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன். வேறு எதுவும் பேசவில்லை’’ என்றார். மத்திய அமைச்சர், தென் மண்டல அமைப்புச் செயலாளர் என திமுகவில் செல்வாக்கோடு வலம் வந்த அழகிரிக்கும், பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2014 ஜனவரி 24-ம் தேதி திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டார்.
அதன்பிறகு தாயார் தயாளு அம்மாளை சந்திக்க கோபாலபுரம் இல்லத்துக்கு பலமுறை வந்தபோதும் கருணாநிதியை அழகிரி சந்திக்கவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் 24-ம் தேதி கருணாநிதியை அழகிரி சந்தித்தார். இதனால் அவர் மீண்டும் திமுகவில் இணைவார் என்று அக்கட்சியினர் மத்தியில் பேச்சு எழுந்தது. இந்நிலையில், திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான மறுநாள் இந்த சந்திப்பு நடந்திருப்பது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.