Published : 09 Feb 2022 01:24 AM
Last Updated : 09 Feb 2022 01:24 AM

ஆளுநர் கூறிய காரணங்கள் தவறானவை: பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து

சென்னை: நீட் தேர்வு தொடர்பான மசோதாவைஆளுநர் திருப்பி அனுப்பியது அரசியலமைப்புச் சட்டப்படி சரியான முடிவு கிடையாது. ஆளுநர் கூறிய காரணங்கள் தவறானவை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து பேரவையில் அவர் நேற்று பேசியதாவது:

கடந்த ஆண்டு செப்.13-ம் தேதி, பேரவையில் நீட் விலக்கு சட்ட மசோதா ஒருமனதாக இயற்றப்பட்டது. தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை பிரதிபலிப்பதாக உள்ள இந்த மசோதாவை, 142 நாட்களுக்கு பிறகு, பேரவைத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இது, அரசியலமைப்பு சட்டப்படி சரி அல்ல.

உயர்நிலை குழுவின் அறிக்கைதான் இந்த சட்ட முன்வடிவுக்கு அடிப்படை என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு விரிவாக ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துகளை கேட்டு, சட்ட நுட்பங்களை ஆய்வு செய்து, கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மாணவர்கள் சேர்க்கை புள்ளிவிவரங்கள் அடிப்படையிலேயே அறிக்கை அளித்துள்ளது. இதை தலைமைச் செயலர் தலைமையிலான குழு ஆய்வு செய்து 7 பரிந்துரைகளில் 3-வது பரிந்துரையை ஏற்றேமசோதா கொண்டுவரப்பட்டது.

எனவே, அறிக்கையின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டம் என்பது முற்றிலும் தவறு.

குழுவின் அறிக்கை ஊகங்கள் அடிப்படையிலானது என்றுஆளுநர் தெரிவித்துள்ளதும் முற்றிலும் தவறு. இது அந்தகுழுவை அவமானப்படுத்துவதுபோல உள்ளது. உண்மையில், பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற, வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு எழுதுவதும் தேர்ச்சி பெறுவதும் எளிதாக உள்ளது. இதர பிரிவினருக்கு எட்டாக்கனியாக உள்ளது.

மேலும், உயர்நிலை குழுவின் அறிக்கை ஒருதலைபட்சமானது என ஆளுநர் தெரிவித்துள்ளது தவறு. சிஎம்சி வேலூர் மற்றும் மத்திய அரசு வழக்கின் தீர்ப்பு நீட் தேர்வை உறுதிப்படுத்தியுள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார். கொள்கை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை, குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதை தவிர்த்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டுவது சரியான அணுகுமுறை அல்ல.

நீட் என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்ளதாக தொடர்ந்து சமூக வலைதளங்கள், விவாதங்களில் பேசப்படுகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி வழங்கிய தீர்ப்பில், ‘உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்தும் மாநிலஅரசின் சட்டம் மாநிலங்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. என்ஐடி போன்ற மத்திய அரசால் நிதி அளிக்கப்படும் நிறுவனங்கள் தவிர்த்து பிறவற்றில் மாணவர் சேர்க்கை, கட்டணங்கள் உள்ளிட்டவற்றை மாநிலங்கள் மட்டுமே வகுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். எனவே, மாநிலங்களுக்கு இதுபோன்ற சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x