Published : 09 Feb 2022 08:03 AM
Last Updated : 09 Feb 2022 08:03 AM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொய் வாக்குறுதியை முன்வைத்து பிரச்சாரம்: திமுக மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

பெரியகுளத்தில் நடந்த அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசுகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

பெரியகுளம்: பொய்யான வாக்குறுதியை முன்வைத்து திமுக பிரச்சாரம் செய்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் பொன்னுப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் எஸ்பிஎம்.சையதுகான், அமைப்புச் செயலாளர் எஸ்டிகே. ஜக்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக அதிமுக உள்ளது. நகர, வார்டு நிர்வாகிகள் ஒருங்கிணைந்து வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே திமுகவின் செயல்பாடு பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது.

திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடு, திறமையின்மையால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் இருந்தபோது இயற்கை இடர்பாடுகளான மழை, வெள்ளம், கரோனா காலங்களில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம்.

கரோனா பாதிப்பின்போது, டெல்லியில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த 900 முஸ்லிம்களை அழைத்துவர ஒரு ரயிலையே பதிவு செய்து அழைத்து வந்தோம். மேலும் கரோனா பாதித்தவர்களுக்கு ராஜ உபசாரத்துடன் சிகிச்சை அளித்து காப்பாற்றினோம். அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கினோம். ஆனால், தற்போதைய கரோனா தொற்றில் திமுகவினர் எந்தவித சேவைகளையும் செய்யவில்லை.

தரமற்ற பொங்கல் பரிசு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதை முன்வைத்து அதிமுகவினர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தீவிரப் பிரச்சாரம் செய்ய வேண்டும். பொய்யான வாக்குறுதியை முன்வைத்து திமுக பிரச்சாரம் செய்து வருகிறது இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட கட்சி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் உட்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x