Published : 09 Feb 2022 08:11 AM
Last Updated : 09 Feb 2022 08:11 AM
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 29 மீனவர்களையும் அவர்களது 79 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிஉள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
29 பேர் 79 படகுகள்
கடந்த 7-ம் தேதி 3 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, மயிலாட்டி கடற்படை தளத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை சேர்த்து, தமிழகத்தைச் சேர்ந்த 29 பேர் இலங்கை காவலில் உள்ளனர். அவர்களின் 79 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசின் வசம் உள்ளன.
இரு நாட்டு மீனவர்களிடையே நிலவும் பதற்றமான நிலை, படகுகள் ஏலம், இலங்கையைச் சேர்ந்தவர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து ஏற்கெனவே கடிதம் எழுதி உள்ளேன்.
எனது தொடர்ச்சியான கோரிக்கைகள், மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்க ஏற்றதொரு நல்ல மாற்றத்தை கொண்டு வரும் என நம்பினேன். ஆனால், துரதிருஷ்டவசமாக, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் இதுவரை குறைவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.
உரிமைக்கு சவால்
இது நமது மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை மட்டுமின்றி, கடலில் தமிழக மீனவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலுடன், பாரம்பரிய கடல் பகுதியில் மீன் பிடிக்கும் அவர்களது உரிமைக்கு சவால் விடுவது போன்றதாகும். எனவே, தாங்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 29 மீனவர்களையும், அவர்களது 79மீன்பிடிப் படகுகளையும் உடனே விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திஉள்ளார்.
52 தமிழக மீனவர்கள் நாளை இந்தியா திரும்புகிறார்கள்
ராமேசுவரம்: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 56 பேரை கடந்த ஜன.25-ம் தேதி இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது.
விடுதலை செய்யப்பட்ட 56 மீனவர்களையும் தமிழகத்துக்கு திருப்பி அனுப்ப இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மீனவர்களை விமானம் மூலம் தாயகம் அனுப்பி வைக்க அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 43 மீனவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் யாழ்ப்பாணத்தில் உள்ள கரோனாசிகிச்சை முகாமில் தமிழக மீனவர்கள் 56 பேரையும் தனிமைப்படுத்தி சிகிக்சைக்காக தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மீண்டும் தமிழக மீனவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 மீனவர்களுக்கு மட்டும் மீண்டும் கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. சிகிச்சை முடிந்து 52 மீனவர்கள் மட்டும் நேற்று கொழும்பு மெருஹானாவில் உள்ள குடியேற்ற தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த 52 மீனவர்களும் நாளை (வியாழன்) விமானம் மூலம் கொழும்பில் இருந்து சென்னை வர உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT