

நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு தேவையான தளவாடங்களை உள்நாட்டில் கொள்முதல் செய்யும் திட்டத்தின் கீழ், கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் மூலமாக ரூ.143 கோடி மதிப்பில் 124 வகை பொருட்களை உற்பத்தி செய்து பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான ஆயுத தேவைகளில் பெருமளவு இறக்குமதியை நம்பியே உள்ளது. இந்நிலையை மாற்ற ஆயுதங்களில் பெரும்பான்மை சதவீதத்தை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் உள்ள தொழில் முனைவோருடன் கைகோர்த்து இதனை சாத்தியப்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
அதற்கேற்ப, கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் பாதுகாப்புத் துறைக்கான தளவாடங்களில் 68 சதவீதம் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது, தொழில் முனைவோர் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இச்சூழலில், கோவையில் பாதுகாப்புத் துறைக்கான தளவாடங்களை உற்பத்தி செய்யும் ஆர்டர்களைப் பெறவும், கோவையை ராணுவ தளவாட உற்பத்திக்கான மையமாக மாற்றவும் இங்குள்ள தொழில் துறையினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாதுகாப்புத் துறைக்கான தளவாடங்களை உற்பத்தி செய்து வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான 124 வகை தயாரிப்புகளை, ரூ.143 கோடி மதிப்பில் கொடிசியாவின் ‘இன்னொவேசன் அன்ட் அடல் இன்குபேசன் சென்டர்’ (சிடிஐஐசி) வாயிலாக கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் மூலமாக உற்பத்தி செய்து பெறுவதற்கு பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர் அஜய் குமார் தனது டிவிட்டர் பதிவில் இதற்கான தகவலை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து சிடிஐஐசி இயக்குநர் எம்.வி.ரமேஷ் பாபு கூறியதாவது:
பாதுகாப்புத் துறைக்கு ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்து வழங்கும் இந்திய பொதுத்துறை நிறுவனங்களுடன் டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு மூலமாக பொதுத் துறை நிறுவனங்களான பெல், பிஇஎம்எல், ஹெச்ஏஎல், பிடிஎல் போன்ற நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வேண்டும். அதற்கு பிறகு அவர்களின் ஆர்டர்களைப் பெற்று கோவையில் உள்ள தகுதி வாய்ந்த தொழில் நிறுவனங்களிடம் அளிக்க வேண்டும். ரூ.143 கோடிக்கான ஆர்டர்களை 3 ஆண்டுகளுக்குள் உற்பத்தி செய்து அளிக்க வேண்டியிருக்கலாம். இதன் மூலமாக கோவையில் உள்ள பல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன் பெறுவார்கள். பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தியாளராக மாறவும் இது வாய்ப்பாக அமையும்.
சிடிஐஐசி என்பது மத்திய அரசின் பாதுகாப்புத் துறைக்கும் கோவையில் உள்ள தொழில் முனைவோருக்கும் இடையில் பாலமாக இருக்கும் நிறுவனமாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகவே நாங்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அடுத்து வரும் 10 ஆண்டுகளில் கோவையில் பாதுகாப்புத் துறைக்கான முன்னணி உற்பத்தி மையமாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.